கிரிக்கெட்டையும் பதம் பார்க்கும் போர்! இங்கிலாந்து கவுண்டி போட்டிகள் நடக்குமா? டியூக்ஸ் பந்து விநியோகத்தில் சிக்கல்
செய்தி முன்னோட்டம்
ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் இடையே நடைபெற்று வரும் போர், சர்வதேச அரசியலில் மட்டுமின்றி விளையாட்டுத் துறையிலும் வினோதமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ள இங்கிலாந்தின் புகழ்பெற்ற கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டிகளுக்குத் தேவையான டியூக்ஸ் கிரிக்கெட் பந்துகளின் வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்கள் இங்கே:-
சிக்கல்
பந்து விநியோகத்தில் சிக்கல் ஏன்?
இங்கிலாந்து கிரிக்கெட்டின் அடையாளம் என்று கருதப்படும் 'டியூக்ஸ்' பந்துகளின் தயாரிப்புச் சங்கிலி மிகவும் சிக்கலானது. இதற்கான தோல் இங்கிலாந்தில் பதப்படுத்தப்பட்டாலும், பந்துகளைத் தைக்கும் வேலை இந்தியாவில்தான் நடைபெறுகிறது. இந்தியாவில் தயாரான பந்துகள் பொதுவாக மத்திய கிழக்கு நாடுகளின் வான்வழி வழியாகவே இங்கிலாந்திற்கு அனுப்பப்படுகின்றன. போர் காரணமாக வான்வெளி மூடப்பட்டிருப்பதாலும், விமானக் கட்டணங்கள் மூன்று மடங்கு உயர்ந்திருப்பதாலும், தயாராக உள்ள பந்துகளை இங்கிலாந்திற்கு கொண்டு வருவதில் பெரும் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.
போட்டிகள்
கவுண்டி போட்டிகளுக்கு ஆபத்தா?
இது ஒரு மிகப்பெரிய நெருக்கடி என பிரிட்டிஷ் கிரிக்கெட் பால்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் திலீப் ஜஜோடியா எச்சரித்துள்ளார். 18 கவுண்டி அணிகள் ஒரே நேரத்தில் விளையாடும்போது, வழக்கமாகத் தேவைப்படும் பந்துகளில் பாதி அளவு மட்டுமே தற்போது கையிருப்பில் உள்ளது. மற்ற நிறுவனப் பந்துகளை பயன்படுத்த இங்கிலாந்து அணிகள் தயங்குவதால், இந்தச் சிக்கல் மேலும் தீவிரமடைந்துள்ளது.
பிற பாதிப்புகள்
விளையாட்டை உலுக்கும் போர்
கிரிக்கெட் மட்டுமின்றி மற்ற விளையாட்டுகளும் இந்தப் போரினால் பாதிக்கப்பட்டுள்ளன. சைப்ரஸில் நடைபெறவுள்ள கேண்டிடேட்ஸ் தொடரில் பாதுகாப்பு காரணங்களுக்காகப் பங்கேற்பது குறித்து இந்திய வீராங்கனை கோனேரு ஹம்பி சந்தேகம் தெரிவித்துள்ளார். வெடிகுண்டு சத்தங்களுக்கு மத்தியில் விளையாடுவது முறையல்ல என அவர் விமர்சித்துள்ளார். ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலால் வான்வெளி மூடப்பட்டபோது, இந்திய நட்சத்திர வீராங்கனை பிவி சிந்து துபாய் விமான நிலையத்தில் மூன்று நாட்கள் சிக்கித் தவித்தார். இதனால் அவர் 'ஆல் இங்கிலாந்து' தொடரிலிருந்து விலக நேரிட்டது குறிப்பிடத்தக்கது.