
ஜிஎஸ்டி 2.0 சீர்திருத்தத்தால் ஐபிஎல் டிக்கெட் விலை உயர்வு; ரசிகர்கள் வருகை மற்றும் வருவாய் குறையும் அபாயம்
செய்தி முன்னோட்டம்
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விகிதம் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளதால், இந்தியன் பிரீமியர் லீக் (ஜிஎஸ்டிஐபிஎல்) போட்டிகளின் டிக்கெட் விலைகள் உயரவுள்ளன. இது ரசிகர்களுக்கு நிதிச் சுமையை அதிகரிப்பதுடன், வரவிருக்கும் சீசனில் மைதானத்தின் வருகை மற்றும் உரிமையாளர்களின் வருவாயைப் பாதிக்கும் என்று அஞ்சப்படுகிறது. புதிய ஜிஎஸ்டி 2.0 கட்டமைப்பின் கீழ், ஐபிஎல் உட்பட அங்கீகரிக்கப்படாத விளையாட்டு நிகழ்வுகளுக்கான அனுமதி, முன்பு இருந்த 28% இலிருந்து தற்போது 40% ஜிஎஸ்டி வரியை ஈர்க்கிறது. இந்த மறு வகைப்பாடு, ஐபிஎல் டிக்கெட்டுகளை ஆடம்பரப் பொருட்கள் பிரிவில் வைத்துள்ளது. இது மைதானத்தில் போட்டியைப் பார்க்கும் அனுபவத்தை அதிக விலை கொண்டதாக மாற்றுகிறது.
டிக்கெட் விலை
டிக்கெட் விலை எவ்வளவு அதிகரிக்கும்?
ஜிஎஸ்டி உயர்வின் விளைவாக, டிக்கெட்டின் மொத்த விலை 10% முதல் 15% வரை அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. உதாரணமாக, ₹1,000 அடிப்படை விலையுள்ள டிக்கெட், முன்பு ₹1,280 ஆக இருந்த நிலையில், இப்போது ₹1,400 ஆக உயரும். இந்த விலையேற்றம், குறிப்பாகப் பஞ்சாப் கிங்ஸ் போன்ற மெட்ரோ அல்லாத நகரங்களை (மொஹாலி மற்றும் தர்மசாலா) மையமாகக் கொண்ட உரிமையாளர்களுக்குப் பாதகமாக அமையும். இந்தச் சந்தைகளில் உள்ள ரசிகர்கள் அதிக விலை உணர்திறன் கொண்டிருப்பதால், சாதாரண ரசிகர்கள் மற்றும் குறைந்த விலை டிக்கெட் வாங்குபவர்களின் வருகை குறையக்கூடும் என்று உரிமையாளர்கள் அஞ்சுகின்றனர். டிக்கெட் வருவாய் என்பது உரிமையாளர்களின் மொத்த வருவாயில் சுமார் 20% பங்களிக்கும் நிலையில், இந்த உயர்வு வருவாயைப் பாதிக்க வாய்ப்புள்ளது.
பாதிப்பு
ஐபிஎல் தவிர எந்தெந்த போட்டிகளுக்கு பாதிப்பு?
ஐபிஎல் மட்டுமல்லாமல், புரோ கபடி லீக் (பிகேஎல்) மற்றும் இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) போன்ற மற்ற விளையாட்டுப் போட்டிகளுக்கும் இந்த ஜிஎஸ்டி உயர்வு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த லீக்குகள் மலிவு விலையிலான டிக்கெட்டுகளை நம்பி இருப்பதால், அதிகரித்த செலவுகள் வருகையை வெகுவாகக் குறைத்து, மைதானத்தின் உற்சாகத்தையும் பாதிக்கக்கூடும். அதே நேரத்தில் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளால் நடத்தப்படும் போட்டிகளுக்கான டிக்கெட் விலைகள் தொடர்ந்து 18 சதவீத ஜிஎஸ்டி வரம்பிலேயே இருக்கும்.