ஐபிஎல் 2026: ஹைதராபாத்திடம் தோற்றாலும் கெத்து காட்டிய பெங்களூரு! முதலிடத்துடன் பிளேஆஃப்க்குள் நுழைந்த ஆர்சிபி
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில் தங்களது விறுவிறுப்பான இறுதி லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) அணியிடம் தோல்வியைத் தழுவியுள்ளது. ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த எஸ்ஆர்ஹெச் அணி 255 ரன்கள் குவித்தது. இந்த இமாலய இலக்கை நோக்கி ஆடிய ஆர்சிபி அணி 200 ரன்கள் மட்டுமே எடுத்து 55 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. எனினும் இந்தத் தற்காலிகத் தோல்வியையும் தாண்டி ஆர்சிபி அணி ஒட்டுமொத்த லீக் சுற்றின் புள்ளிப்பட்டியலில் 18 புள்ளிகளுடன் முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டது.
இஷான் கிஷன்
இஷான் கிஷன் மற்றும் அபிஷேக் சர்மாவின் அசுரத்தனமான பேட்டிங்
ஹைதராபாத் அணியின் இந்த இமாலய ரன் குவிப்பிற்கு அதன் அதிரடி பேட்ஸ்மேன்களான இஷான் கிஷன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோரே முக்கியக் காரணமாக அமைந்தனர். தொடக்க வீரர் அபிஷேக் சர்மா வெறும் 22 பந்துகளில் 5 சிக்ஸர்களுடன் 56 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதன் பின்னர் களம் புகுந்த இஷான் கிஷன் 46 பந்துகளில் 79 ரன்கள் குவித்து அசத்தியதுடன், தனது ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 3,500 ரன்கள் என்ற மைல்கல்லையும் கடந்து சாதனை படைத்தார். இவர்களுடன் ஹென்ரிச் கிளாசென் 51 ரன்கள் சேர்த்ததால் ஹைதராபாத் அணி வலுவான நிலையை எட்டியது.
ஆர்சிபி போராட்டம்
கடினமான இலக்கை நோக்கிப் போராடிய பெங்களூரு பேட்ஸ்மேன்கள்
அடுத்ததாக 256 ரன்கள் என்ற இமாலய இலக்கைத் துரத்திய ஆர்சிபி அணிக்கு வெங்கடேஷ் ஐயர் தொடக்கத்திலேயே 19 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து அதிரடியான அடித்தளம் அமைத்துக் கொடுத்தார். அவர் விக்கெட் இழந்த பின்னர் ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் படிதார் பொறுப்புடன் ஆடி 39 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார். இறுதிவரை போராடிய கிருணால் பாண்டியா 41 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். எனினும் ஹைதராபாத் அணியின் ஈஷான் மலிங்காவின் துல்லியமான பந்துவீச்சால் ஆர்சிபி அணியால் 4 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
பிளேஆஃப் தகுதி
ரஜத் படிதாரின் அதிவேக சிக்ஸர் சாதனையும் பிளேஆஃப் தகுதியும்
இந்தப் போட்டியில் ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார் ஐபிஎல் தொடரில் தனது 100 ஆவது சிக்ஸரை அடித்து ஒரு புதிய வரலாற்றுச் சாதனைப் படைத்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில் மிகக் குறைந்த பந்துகளை (933 பந்துகள்) எதிர்கொண்டு 100 சிக்ஸர்கள் அடித்த மூன்றாவது அதிவேக வீரர் என்ற பெருமையை அவர் தற்போது பெற்றுள்ளார். இதற்கிடையே, லீக் சுற்றின் முடிவில் ஆர்சிபி அணி +0.783 என்ற சிறந்த நெட் ரன் ரேட் அடிப்படையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதே நேரத்தில் 18 புள்ளிகளைப் பெற்றுள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மூன்றாவது இடத்தைப் பிடித்து பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. குஜராத் டைட்டன்ஸ் இரண்டாவது பீடத்துடன் ஏற்கனவே வாய்ப்பை உறுதி செய்த நிலையில், நான்காவது இடத்திற்க்கான போட்டி நீடிக்கிறது.