
ஐபிஎல் 2025: 175+ன்னா கண்டிப்பா முடியாது; மீண்டும் தோற்றது சென்னை சூப்பர் கிங்ஸ்
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2025 தொடரில் சேப்பாக்கம் எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் சனிக்கிழமை (ஏப்ரல் 5) நடைபெற்ற 17வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் (டிசி) அணியிடம் தோற்றது.
முன்னதாக, போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் முதலில் பேட்டிங் செய்து களமிறங்கியது.
ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் இல்லாத நிலையில், கே.எல்.ராகுல் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினார்.
அணியின் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஜேக் ஃபிரேசர் டக்கவுட் ஆனாலும் கே.எல்.ராகுல் 77 ரன்கள் குவித்தார்.
இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்தது. சிஎஸ்கே அணியில் கலீல் அகமது அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
சொதப்பல்
சிஎஸ்கேவின் டாப் ஆர்டர் சொதப்பல்
கடந்த ஐந்து சீசன்களாகவே 175+ ரன்களை சேஸ் செய்ய முடியாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் திணறி வரும் நிலையில், இதில் 184 ரன்கள் இலக்குடன் களமிறங்கியது.
இந்நிலையில், பவர்பிளே முடிவதற்குள் டாப் ஆர்டரின் முதல் 3 வீரர்கள் அவுட்டானது அணிக்கு நெருக்கடியைக் கொடுத்தது.
எனினும், கடைசி வரை கடுமையாக போராடிய விஜய் சங்கர் 69 ரன்களும், எம்எஸ் தோனி 30 ரன்களும் எடுத்தாலும், இது வெற்றியைப் பெறுவதற்கு போதுமான அளவில் இல்லை.
டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் அதிகபட்சமாக விப்ராஜ் நிகாம் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன் மூலம் 4 போட்டிகளில் ஒரு வெற்றி மற்றும் 3 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் எட்டாவது இடத்தில் உல்ளது.