ஐபிஎல் 2024க்கான வர்த்தக சாளரம் இன்று முதல் மீண்டும் திறப்பு
செய்தி முன்னோட்டம்
செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 19) துபாயில் நடந்து முடிந்த ஐபிஎல் 2024 ஏலத்திற்குப் பிறகு புதன்கிழமை ஐபிஎல் வர்த்தக சாளரம் மீண்டும் திறக்கப்படுகிறது.
ஐபிஎல் 2024க்கான மினி ஏலத்தில் இதுவரை இல்லாத வகையில் வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டனர்.
குறிப்பாக சமீபத்தில் நடந்து முடிந்த ஒருநாள் உலகக்கோப்பையில் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ரூ.20.5 கோடிக்கு வாங்கி அதிரவைத்த நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மிட்செல் ஸ்டார்க்கை ரூ.24.75 கோடி கொடுத்து வாங்கியுள்ளது.
இந்நிலையில், ஏலம் நிறைவடைந்த நிலையில், வர்த்தக சாளரம் மீண்டும் திறக்கப்படுகிறது.
வர்த்தக சாளரம் திறக்கப்பட்ட பிறகு வீரர்களை வேறு அணியிலிருந்து வாங்குவது அல்லது கைமாற்றுவது போன்றவற்றை அணிகள் மேற்கொள்ள முடியும்.
IPL 2024 Trading Window Rules
ஐபிஎல் 2024 வர்த்தக சாளரம் விதிகள்
வர்த்தக சாளரத்தில் வீரர்களை வாங்குவதற்கு இரண்டு வழிகள் மட்டுமே உள்ளன. வீரருக்கான விலையை முழுவதுமாக பணமாக செலுத்தலாம் அல்லது மற்றொரு வீரரைக் கொடுத்து அவருக்கு பதிலாக இவர் என மாற்றிக்கொள்ளலாம்.
வர்த்தக சாளரம் வழக்கமாக ஐபிஎல் சீசன் முடிந்து ஒரு மாதத்திற்குப் பிறகு தொடங்குகிறது மற்றும் ஐபிஎல் ஏலத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு வரை இருக்கும்.
பின்னர் ஏலம் முடிந்த ஒரு நாள் கழித்து மீண்டும் தொடங்குகிறது மற்றும் ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு வரை இருக்கும்.
மும்பை இந்தியன்ஸ் கேப்டன் பொறுப்பில் இருந்து ரோஹித் ஷர்மா நீக்கப்பட்டுள்ளதால், அவரை தங்கள் அணிக்கு கொண்டு வர டெல்லி கேப்பிடல்ஸ் முயற்சி செய்வதாக கூறப்படுவதால், இது உற்று நோக்கும் ஒன்றாக பார்க்கப்படுகிறது.