தோனிக்காக விசில் போட்ட சிஎஸ்கே ரசிகர்கள் : பிரமித்து பார்த்ததாக மார்க் வுட் கருத்து
சென்னையில் திங்கட்கிழமை (ஏப்ரல் 3) நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்எஸ்ஜி) மோதலின் போது, உலகின் மிகவும் கடினமான வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான மார்க் வுட்டை தோனி வெளுத்தெடுத்தார். 41 வயதிலும் மார்க் வுட் போன்ற அபாயகரமான பந்துவீச்சாளர்களை தோனி எளிதாக எதிர்கொண்ட விதம் சேப்பாக்கம் மைதானத்தில் குழுமியிருந்த ரசிகர்களை மட்டுமல்லாது முன்னாள் வீரர்கள் பலரையும் வெகுவாக கவர்ந்தது. சேப்பாக்கத்தில் சிஎஸ்கே ரசிகர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில் மார்க் வுட், தனது கேப்டன் கே.எல்.ராகுலுடன் சேர்ந்து பதற்றமடையாமல் எப்படி தோனியை வீழ்த்தலாம் என்று ஆலோசித்ததாக பேட்டியில் கூறியுள்ளார்.
தோனி குறித்தும் சிஎஸ்கே ரசிகர்கள் குறித்தும் மார்க் வுட் ஆச்சரியம்
மார்க் வுட் தனது பேட்டியில் கூறியது பின்வருமாறு:- நான் உண்மையில் அவரை ரன்களை எடுப்பதைத் தடுத்து வெளியேற்றுவதற்கான வழிகளைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன். துரதிர்ஷ்டவசமாக, எனக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், குறிப்பாக அந்த இரண்டாவது ஷாட் அற்புதமான ஷாட். நானும் கே.எல்.ராகுலும் முடிவு செய்த இடத்தில் சரியாக பந்தை வீசினேன். அந்த பாலை அடித்ததால் கேட்ச் நிச்சயம் எனும் நிலையில், அவர் அதை அசால்ட்டாக சிக்சருக்கு பறக்கவிட்டதை என்னால் நம்ப முடியவில்லை. மேலும் அவர் பேட் செய்ய வெளியே வந்தபோது எழுந்த ரசிகர்களின் ஆரவாரம், பின்னர் அவர் அந்த இரண்டு பந்துகளையும் அடிக்கும் போதும் தொடர்ந்து எனக்கு பிரமிப்பாக இருந்தது. இது ஒரு சிறந்த அனுபவம். இவ்வாறு அவர் கூறினார்.