ஐபிஎல் 2023 : குஜராத் டைட்டன்சுக்கு எதிராக டெல்லி கேப்பிடல்ஸ் முதல் வெற்றியை பெறுமா?
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 இன் ஏழாவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் (டிசி), நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) அணியை செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 4) அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் எதிர்கொள்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் ஜிடி வெற்றி பெற்ற நிலையில், டிசி தனது தொடக்க ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸிடம் தோல்வி அடைந்துள்ளது. போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்க உள்ள நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மற்றும் ஜியோ சினிமாவில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். ஜிடி அணி டிசி அணியுடன் இதுவரை ஒருமுறை மட்டுமே நேருக்கு நேர் மோதியுள்ள நிலையில், அதில் ஜிடி வெற்றி பெற்றுள்ளது.
எதிர்பார்க்கப்படும் பிளேயிங் 11
டிசி அணியில் இந்த முறை ரிஷப் பந்துக்கு பதிலாக டேவிட் வார்னர் அணியை வழிநடத்தி வரும் நிலையில், ஏற்கனவே லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸுக்கு எதிராக தோல்வியைத் தழுவியதால், வெற்றிக் கணக்கை தொடங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. எதிர்பார்க்கப்படும் விளையாடும் 11 வீரர்கள் பின்வருமாறு:- டிசி : டேவிட் வார்னர், பிருத்வி ஷா, மிட்செல் மார்ஷ், லலித் யாதவ், சர்பராஸ் கான், ரோவ்மன் பவல், அக்சர் படேல், குல்தீப் யாதவ், சேத்தன் சகாரியா, கலீல் அகமது மற்றும் முகேஷ் குமார். ஜிடி : ஷுப்மான் கில், விருத்திமான் சாஹா, சாய் சுதர்ஷன், ஹர்திக் பாண்டியா, மேத்யூ வேட், விஜய் சங்கர், ராகுல் தீவட்டியா, ரஷித் கான், ஜோசுவா லிட்டில், முகமது ஷமி, அல்சாரி ஜோசப்.