குஜராத் டைட்டன்சுக்கு எதிரான வாழ்வா சாவா போராட்டத்தில் மிட்செல் மார்ஷ் இல்லாதது ஏன்? டேவிட் வார்னர் விளக்கம்!
ஐபிஎல் 2023 தொடரின் 44வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான வாழ்வா சாவா போராட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் மிட்செல் மார்ஷ் இடம் பெறவில்லை. கடந்த வாரம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக சிறந்த ஆல்ரவுண்ட் ஆட்டத்தை வெளிப்படுத்திய மிட்செல் மார்ஷ், உடல்நலக்குறைவு காரணமாக இதில் பங்கேற்கவில்லை எனத் தெரிகிறது. ஐபிஎல் 2023 தொடரில் முதல் ஐந்து போட்டிகளிலும் தொடர்ந்து தோல்வியை தழுவிய டெல்லி கேப்பிடல்ஸ் தற்போது பிளே ஆப் வாய்ப்பை தக்கவைக்க வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த டெல்லி கேப்பிடல்ஸ்
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டன் டேவிட் வார்னர் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். மிட்செல் மார்ஷ் இல்லாத நிலையில், இடது கை வேகப்பந்து வீச்சாளரான கலீல் அகமதுயை பெற்று இம்பாக்ட் வீரராக அணிக்கு திரும்பியுள்ளார். டாஸ் வென்று பேசிய டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டன் டேவிட் வார்னர், "நாங்கள் முதலில் பேட்டிங் செய்வோம். மைதானம் சற்று வறண்டதாகத் தெரிகிறது. அதிக ரன் குவிக்க விரும்புகிறோம். துரதிர்ஷ்டவசமாக, மிட்செல் மார்ஷ் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். அதனால் ரிலீ ரோஸ்ஸோவ் அவருக்கு பதிலாக வருகிறார். கலீல் மீண்டும் திரும்பிவிட்டார்." என்று கூறினார்.