பவர்பிளே கிங் : ஐபிஎல் 2023 சீசனில் தொடர்ந்து அசத்தி வரும் முகமது ஷமி!
ஐபிஎல் 2023ல் கடந்த சீசனை போலவே குஜராத் டைட்டன்ஸ் அணி சிறப்பாக செயல்பட்டு வர அந்த அணி வீரர்களுக்கு, குறிப்பாக முகமது ஷமிக்கு முக்கிய பங்கு உண்டு. ஷமி நடப்பு ஐபிஎல்லில் பவர்பிளேயில் அதிக விக்கெட் எடுத்தவர்களில் முதலிடத்தில் உள்ளார். இதுவரை 13 இன்னிங்ஸ்களில் பவர்பிளேயில் மட்டும் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஐபிஎல் 2023ல் ஷமியை தவிர்த்து பவர்பிளேயில் இதுவரை 10 விக்கெட்டுகளை வேறு எந்த பந்துவீச்சாளரும் எடுக்கவில்லை. டிரென்ட் போல்ட் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் தலா ஒன்பது விக்கெட்டுகளுடன் ஷமிக்கு அடுத்த இடத்தில் உள்ளனர். மேலும் முகமது ஷமி ஐபிஎல் வரலாற்றில் பவர்பிளேயில் 44 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த கட்டத்தில் புவனேஷ்வர் குமார் 60 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
ஐபிஎல்லில் குஜராத் அணிக்காக அதிக விக்கெட் வீழ்த்தி சாதனை
ஐபிஎல் 2020 முதல், ஷமி 37 விக்கெட்டுகளுடன் பவர்பிளேயில் இரண்டாவது அதிக விக்கெட் எடுத்தவராக உள்ளார். இந்த காலத்தில் போல்ட் மட்டுமே ஷமியை விட 40 விக்கெட்டுகளுடன் முன்னிலையில் உள்ளார். ஐபிஎல் 2023 இல் ஷமி 165 டாட் பால்களை வீசியுள்ளார். இது இந்த சீசனில் மற்ற எந்தவொரு பந்துவீச்சாளர்களையும் விட அதிகமாகும். சிராஜ் மற்றும் ரஷித் கான் முறையே 135 மற்றும் 114 புள்ளிகளுடன் அவருக்கு அடுத்த இடங்களில் உள்ளனர். முகமது ஷமி குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக 43 விக்கெட்டுகளை வீழ்த்தி, அணியின் அதிகபட்ச விக்கெட் எடுத்தவராக உள்ளார். ரஷீத் கான் 42 விக்கெட்டுகளுடன் முகமது ஷமிக்கு அடுத்த இடத்தில் உள்ளார்.