பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தேர்வுக்குழு தலைவராக இன்சமாம்-உல்-ஹக் நியமனம்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக முன்னாள் டெஸ்ட் கேப்டன் இன்சமாம்-உல்-ஹக் மீண்டும் பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே 2016 முதல் 2019 வரை இன்சமாம்-உல்-ஹக் தேர்வுக்குழு தலைவராக இருந்த நிலையில், தற்போது மீண்டும் தேர்வுக்குழு தலைவராக பொறுப்பேற்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் சம்மதம் தெரிவித்துள்ளதாக, பிடிஐ அறிக்கை வெளியிட்டுள்ளது. தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் தொழில்நுட்ப குழுவின் உறுப்பினர்களாக இருக்கும் மிஸ்பா-உல்-ஹக், இன்சமாம் மற்றும் முஹம்மது ஹபீஸ், புதிய தேர்வுக்குழு மற்றும் அதில் இடம்பெற வேண்டியவர்கள் குறித்து ஆலோசித்து வருகின்றனர். மேலும், அணியின் இயக்குனர் மிக்கி ஆர்தர் மற்றும் தலைமை பயிற்சியாளர் கிராண்ட் பிராட்பர்ன் ஆகியோர் தேர்வுக் குழுவில் நீடிக்க வேண்டுமா என்பதையும் அவர்கள் அடுத்தவாரம் முடிவு செய்ய உள்ளனர்.
பாபர் அசாமிடம் கருத்து கேட்க முடிவு
வெளியான அறிக்கையின்படி, கிரிக்கெட் தொழில்நுட்ப குழு இயக்குநரையும் தலைமைப் பயிற்சியாளரையும் தேர்வுக் குழுவின் ஒரு பகுதியாக மாற்றும் சோதனை வெற்றி பெற்றதா இல்லையா என்று கேப்டன் பாபர் ஆசாமிடம் கேட்க உள்ளதாக தெரிகிறது. பாபரின் கருத்துக்கள் கிடைத்தவுடன், கிரிக்கெட் தொழில்நுட்பக் குழு தனது பரிந்துரைகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவருக்கு அனுப்பும். இதன்பிறகு புதிய தலைமை தேர்வாளராக இன்சமாம் மட்டும் நியமிக்கப்படுவதா அல்லது ஒட்டுமொத்த தேர்வுக் குழுவை மாற்றுவதா என்பது குறித்து முடிவு செய்யப்படும். இதற்கிடையே, மிக்கி ஆர்தர் மற்றும் பிராட்பர்ன் ஆகியோர் தாங்கள் தேர்வுக்குழுவில் இடம் பெறுவதற்கான உறுதிமொழியை பெற்ற பின்னரே அணியில் பொறுப்பேற்ற நிலையில், அவர்கள் நீக்கப்பட்டால் பதவியிலிருந்து விலகும் முடிவை எடுக்கலாம் எனக் கூறப்படுகிறது.