சர்வதேச ஒலிம்பிக் தினம் 2023 : பலரும் அறியாத சில சுவாரஸ்ய தகவல்கள்
ஆண்டுதோறும் ஜூன் 23 அன்று ஒலிம்பிக் தினம் கொண்டாடப்படுகிறது. இது விளையாட்டு, ஆரோக்கியம் மற்றும் உலகெங்கிலும் உள்ள அனைவரையும் சுறுசுறுப்பாகவும், ஒன்றாக இணைந்திருப்பதையும் வலியுறுத்துகிறது. பாரிஸில் உள்ள சோர்போனில் பியர் டி கூபெர்டின் 23 ஜூன் 1894 அன்று பண்டைய ஒலிம்பிக் விளையாட்டுகளின் மறுமலர்ச்சியை மீண்டும் தொடங்கியதை நினைவுகூரும் விதமாக, 1948 முதல் ஆண்டுதோறும் ஒலிம்பிக் தினம் கொண்டாடப்படுகிறது. ஆரம்பத்தில் ஐரோப்பிய நாடுகள் மட்டுமே இதை கொண்டாடி வந்த நிலையில், 1978 முதல் அனைத்து நாடுகளும் கொண்டாட ஆரம்பித்தன. இந்த ஆண்டு ஒலிம்பிக் தினத்தின் கருப்பொருள் 'லெட்ஸ் மூவ்' ஆகும். இது உலகெங்கிலும் உள்ள மக்களை தினசரி உடல் ஆரோக்கியத்திற்கு நேரத்தை ஒதுக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
கலைத்துறையினரும் பங்கேற்ற ஒலிம்பிக் போட்டிகள்
1912-1948 வரை ஒலிம்பிக்கில் கட்டிடக்கலை, இலக்கியம், இசை, ஓவியம் மற்றும் சிற்பம் என ஐந்து வகையான கலைப்போட்டிகளும் இடம் பெற்றிருந்தன. தற்போது அவை ஒலிம்பிக் போட்டிகளின் ஒரு அங்கமாக இல்லை. எனினும் சர்வதேச ஒலிம்பிக் சங்கம் கலாச்சார ஒலிம்பியாட் மூலம் கலையுடன் தொடர்ந்து இணைந்துள்ளது. ஒலிம்பிக்கில் வழங்கப்படும் தங்க பதக்கங்கள் 1912 வரை மட்டுமே முழுமையாக தங்கத்தில் செய்து வழங்கப்பட்டன. அதன் பின்னர் 6 கிராம் தங்கம் மற்றும் வெள்ளி கலந்து செய்யப்படும் பதக்கமே முதலிடம் பெறுபவருக்கு வழங்கப்படுகிறது. 1896 இல் முதன்முதலாக தொடங்கப்பட்ட நவீன கால ஒலிம்பிக் போட்டிகள், 1916 (முதல் உலகப்போர்), 1940 மற்றும் 1944 (இரண்டாம் உலகப்போர்) ஆகிய ஆண்டுகளில் மட்டுமே ரத்து செய்யப்பட்டன.