ஐந்தாவது போட்டியில் தோல்வி; 2 ஆண்டுகளில் முதல்முறையாக டி20 தொடரை இழந்தது இந்தியா
ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 13) அமெரிக்காவின் புளோரிடாவில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் இந்திய கிரிக்கெட் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. முன்னதாக, போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் வந்தவேகத்தில் பெவிலியன் திரும்பினாலும், சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா ஜோடி அணியை மீட்டது. சூர்யகுமார் அரைசதம் அடித்து 61 ரன்களும், திலக் வர்மா 27 ரன்களும் எடுத்தனர். இறுதியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் அபாரமாக பந்துவீசிய ரொமாரியோ ஷெப்பர்ட் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பிராண்டன் கிங் அபார பேட்டிங்
166 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான கைல் மேயர்ஸ் சொற்ப ரன்களில் வெளியேறினார். இதையடுத்து மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான பிராண்டன் கிங், நிக்கோலஸ் பூரனுடன் கூட்டணி அமைத்து வெற்றியை நோக்கி வழிநடத்தினார். பூரன் 47 ரன்களில் அவுட்டான நிலையில், பிராண்டன் கடைசி வரை அவுட்டாகாமல் 85 ரன்கள் குவித்ததோடு, 18 ஓவர்களில் இலக்கை எட்டி அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இதன் மூலம் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியதோடு, தொடரையும் 2-3 என்ற கணக்கில் இழந்தது. மேலும், 2021இல் இலங்கையுடனான இருதரப்பு தொடருக்கு பிறகு, இந்திய அணி முதல் முறையாக டி20 தொடரை தற்போது இழந்துள்ளது.