INDvsSL : இந்திய வீரர்கள் அபாரம்; இலங்கை அணிக்கு 358 ரன்கள் இலக்கு நிர்ணயம்
ஒருநாள் உலகக்கோப்பை லீக் சுற்றில் வியாழக்கிழமை (நவம்பர் 2) நடைபெற்ற போட்டியில் இந்தியா இலங்கைக்கு 358 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. முன்னதாக, மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை கிரிக்கெட் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி கொடுக்கும் வகையில், போட்டியின் இரண்டாவது பந்திலேயே கேப்டன் ரோஹித் ஷர்மா 4 ரன்களில் அவுட்டானார். எனினும், அதன் பின்னர் சுதாரித்துக் கொண்டு ஜோடி சேர்ந்த ஷுப்மன் கில் மற்றும் விராட் கோலி நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை மீட்டனர்.
மூன்று இந்திய வீரர்கள் அரைசதம்
இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஷுப்மன் கில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 92 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். அவரைத் தொடர்ந்து நட்சத்திர வீரர் விராட் கோலியும் 88 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட்டாகி சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார். அதன் பின்னர் ஷ்ரேயாஸ் ஐயர் தன் பங்கிற்கு தாண்டவமாடி 82 ரன்கள் குவித்தார். மேலும் ரவீந்திர ஜடேஜா கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடி 35 ரன்கள் குவித்த நிலையில், இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 357 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியில் அபாரமாக பந்துவீசிய தில்ஷன் மதுஷங்க 5 விக்கெட்டுக்களை கைப்பற்றி அசத்தினார்.