பங்களாதேஷிற்கு ஃபீல்டிங் செட் செய்து கொடுத்தது ஏன்? ரிஷப் பண்ட் விளக்கம்
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷப் பண்ட், டெஸ்ட் கிரிக்கெட் மீது தனக்குள்ள அன்பை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தினார். பங்களாதேஷுக்கு எதிராக சென்னையில் சதம் அடித்ததன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் தனது சிறந்த நிலைக்குத் திரும்பினார். ஆனால், இந்த போட்டியில் அவரது பேட்டிங் மட்டும் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கவில்லை. அவர் பெட்டின் செய்துகொண்டிருந்தபோது, பங்களாதேஷுக்கு ஃபீல்டிங் அமைத்துக் கொடுத்த சம்பவமும் நிகழ்ந்துள்ளது. முன்பு எம்எஸ் தோனியும் ஒருமுறை இதேபோல் செய்துள்ளார். ரிஷப் பண்டின் இந்த செயல் குறித்த காணொளி வைரலாக மாறிய நிலையில், போட்டி முடிந்ததும் அவரிடமே இதுகுறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த காரணம் இன்னும் திகைக்க வைத்துவிட்டது.
ரிஷப் பண்ட் விளக்கம்
இந்த செயல் குறித்து ரிஷப் பண்ட் கூறுகையில், "முதலில், நான் அஜய் பாயிடம் மைதானத்திற்கு வெளியே பேசிக்கொண்டு இருந்தேன். நாம் எங்கு விளையாடினாலும், யாரை எதிர்த்து விளையாடினாலும், கிரிக்கெட்டின் தரம் முன்னேற வேண்டும் என்று அவர் கூறினார். இதைத் தொடர்ந்து அங்கு மிட் விக்கெட்டில் பீல்டர் இல்லாததை நான் பார்த்தேன். அதே நேரத்தில் ஒரே பகுதியில் இரண்டு பீல்டர்களைப் பார்த்தேன். அதனால் ஒரு பீல்டரை நடுப்பகுதிக்கு மாற்றச் சொன்னேன்." என்று கூறினார். இதற்கிடையே, 2022 டிசம்பரில் ஏற்பட்ட ஒரு ஆபத்தான கார் விபத்திற்கு பிறகு முதல் முறையான அவர் விளையாடிய டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இதுவாகும். குறிப்பிடத்தக்க வகையில் 2022 டிசம்பரில் அவர் விபத்திற்கு முன்பு விளையாடிய கடைசி டெஸ்டும் பங்களாதேஷிற்கு எதிரானதேயாகும்.