இந்தியா vs ஆஸ்திரேலியா மூன்றாவது T20I : ருதுராஜ் சதம்; ஆஸ்திரேலிய அணிக்கு 223 ரன்கள் இலக்கு
இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு 223 ரன்களை வெற்றி இலக்காக இந்திய கிரிக்கெட் அணி நிர்ணயித்துள்ளது. கவுகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 28) நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் வெறும் 6 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். அடுத்து வந்த இஷான் கிஷானும் ஓ ரன்னில் டக்கவுட் ஆகி வெளியேறிய நிலையில், அடுத்து ஜோடி சேர்ந்த ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சூர்யகுமார் யாதவ் அணியை மீட்டனர்.
ருதுராஜ் கெய்க்வாட் சதம்
ருதுராஜ் கெய்க்வாட் ஒரு புறம் நிலைத்து நின்று ஆடிய நிலையில், மறுபுறம் அதிரடியாக ஆடிய சூர்யகுமார் யாதவ் 39 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டாகி வெளியேறினார். இதைத் தொடர்ந்து ருதுராஜ் கெய்க்வாட்டுடன் திலக் வர்மா ஜோடி சேர்ந்த நிலையில் இருவரும் அதிரடியாக ஆடி ரன் குவித்தனர். கடைசி 3 ஓவர்களில் இருவரும் 67 ரன்கள் சேர்த்த நிலையில் திலக் வர்மா 31 ரன்களும், ருதுராஜ் கெய்க்வாட் 123 ரன்களும் எடுத்தனர். ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு டி20 கிரிக்கெட்டில் இது முதல் சதமாகும். மேலும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் இந்தியர் ஒருவர் எடுக்கும் முதல் சதம் இதுவாகும்.