INDvsAUS 3வது போட்டி : இந்தியாவுக்கு 353 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஆஸ்திரேலியா
இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்கு 353 ரன்களை வெற்றி இலக்காக ஆஸ்திரேலியா நிர்ணயித்துள்ளது. முன்னதாக, டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் சிறப்பான தொடக்கத்தை அமைத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஒன்பதாவது ஓவரில் பிரஷித் கிருஷ்ணா இந்த ஜோடியை பிரித்து டேவிட் வார்னரை 56 ரன்களில் அவுட்டாக்கி வெளியேற்றினாலும், அடுத்து மிட்செல் மார்ஷ் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் கூட்டணி அமைத்து அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜஸ்ப்ரீத் பும்ரா
மிட்செல் மார்ஷ் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஜோடியை பிரிக்க கடுமையாக இந்திய கிரிக்கெட் அணி போராடிய நிலையில், 28வது ஓவரில் குல்தீப் யாதவ் சுழலில் மிட்செல் மார்ஷ் 96 ரன்களில் அவுட்டானார். மறுபுறம், ஸ்டீவ் ஸ்மித் 74 ரன்கள் எடுத்து அவுட்டான நிலையில், மார்னஸ் லாபுசாக்னே தன்பங்கிற்கு 72 ரன்கள் குவித்தார். இதன்மூலம், ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஜஸ்ப்ரீத் பும்ரா 3 விக்கெட்டுகளையும் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.