சந்திரனில் சரித்திரம் படைத்த இந்தியா; அயர்லாந்தில் இந்திய கிரிக்கெட் அணி கொண்டாட்டம்
புதன்கிழமை (ஆகஸ்ட் 23) சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்குவதைப் பார்த்து ஒட்டுமொத்த இந்தியாவும் கொண்டாட்டத்தில் உள்ளது. இந்நிலையில், அயர்லாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் பங்கேற்க தயாராகி வரும் இந்திய கிரிக்கெட் அணியும், டப்ளினில் உள்ள தி வில்லேஜ் கிரிக்கெட் மைதானத்தில் தொலைக்காட்சியில் சந்திராயன் தரையிறங்குவதை நேரடியாக பார்த்து கொண்டாடினர். இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில், சந்திரயான் 3 சந்திரனின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியதை இந்திய வீரர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதை காணலாம். இதற்கிடையே, இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரோஹித் ஷர்மா, விராட் கோலி உள்ளிட்ட பலரும் இந்த சிறப்பு தருணத்தை கொண்டாடும் வகையில் எக்ஸ் தளத்தில் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.
நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய உலகின் முதல் நாடு
இந்தியாவின் இஸ்ரோ அனுப்பிய சந்திராயன் 3 நிலவின் மிகவும் இருண்ட பகுதியான தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதன் மூலம் நிலவின் தென்துருவப் பகுதியில் ரோவரை வெற்றிகரமாக தரையிறக்கிய உலகின் முதல் நாடு என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது. மேலும், அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்குப் பிறகு சந்திரனில் ரோவரை வெற்றிகரமாக தரையிறக்கிய உலகின் நான்காவது நாடு என்ற பெருமையையும் இந்தியா பெற்றுள்ளது. விஞ்ஞானிகளின் கடின உழைப்பை பாராட்டிய பிரதமர் நரேந்திர மோடி, "இதுவரை எந்த நாடும் அங்கு (சந்திரனின் தென் துருவத்தை) அடைந்ததில்லை. நமது விஞ்ஞானிகளின் கடின உழைப்பால் நாம் அங்கு சென்றுள்ளோம்." என்று பாராட்டியுள்ளார்.