LOADING...
96 போட்டிகளில் முதல்முறையாக இந்திய அணி பரிதாப தோல்வி; சாதனை படைத்த தென்னாப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர்கள்
96 டி20 போட்டிகளில் முதல்முறையாக இந்திய அணி பரிதாப தோல்வி

96 போட்டிகளில் முதல்முறையாக இந்திய அணி பரிதாப தோல்வி; சாதனை படைத்த தென்னாப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர்கள்

எழுதியவர் Sekar Chinnappan
Dec 12, 2025
08:40 am

செய்தி முன்னோட்டம்

இந்தியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி, 51 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முல்லன்பூரில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (டிசம்பர் 11) நடைபெற்ற இந்தப் போட்டியில், தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர்களின் ஆதிக்கம் வரலாறு படைத்துள்ளது. கூடுதல் விவரங்கள் பின்வருமாறு:-

சாதனை

வேகப்பந்து வீச்சில் புதிய சாதனை

முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி 213 ரன்கள் குவிக்க, இந்திய அணியை 162 ரன்களுக்குள் சுருட்டி, 51 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தென்னாப்பிரிக்கா அணி தொடரில் 1-1 என சமநிலையில் உள்ளது. இந்தப் போட்டியில், இந்திய கிரிக்கெட் அணியின் அனைத்து விக்கெட்டுகளையும் தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே கைப்பற்றி ஒரு புதிய சாதனையைப் படைத்தனர். டி20 சர்வதேசப் போட்டியில் தென்னாப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர்கள் அனைத்து விக்கெட்டுகளையும் கைப்பற்றுவது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு 2022 ஆம் ஆண்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 9 விக்கெட்டுகளை வேகப்பந்து வீச்சாளர்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது.

இந்தியா

இந்திய அணியின் சோகம்

சொந்த மண்ணில் நடந்த 96 டி20 கிரிக்கெட் போட்டிகளில் முதல் முறையாக, இந்தியா 50 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து சோகமான சாதனை படைத்துள்ளது. மேலும், கேப்டன் சூர்யகுமார் யாதவின் தலைமையில் இந்திய அணி ஏழு முறை 210 ரன்களுக்கு மேல் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட போட்டிகளில் சேஸ் செய்யத் தவறி, ஒரு முறை கூட வெற்றி பெறவில்லை. இது இந்திய அணிக்கு, குறிப்பாக டி20 உலகக் கோப்பைக்கு முன் இன்னும் எட்டு போட்டிகள் மட்டுமே உள்ள நிலையில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement