மகளிர் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வரலாற்று வெற்றி படைத்த இந்தியா
மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான மகளிர் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. டாஸ் வநேர ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்து களமிறங்கியது. இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாத அந்த அணி 219 ரன்களுக்கு சுருண்டது. சிறப்பாக பந்துவீசிய பூஜா வஸ்த்ராகர் 4 விக்கெட்டுகளையும், ஸ்னே ராணா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இதையடுத்து பேட்டிங் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 406 ரன்கள் குவித்தது. ஸ்மிருதி மந்தனா (74), ஜெமீமா ரோட்ரிகஸ் (73), தீப்தி ஷர்மா (78) மற்றும் ரிச்சா கோஷ் (52) அரைசதங்கள் விளாசினர்.
8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
இதைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா கடுமையாக போராடியும், 261 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலிய அணியில் தஹிலா மெக்ராத் அதிகபட்சமாக 73 ரன்கள் சேர்த்தார். இரண்டாவது இன்னிங்சில் சிறப்பாக பந்துவீசிய ஸ்னே ராணா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதைத் தொடர்ந்து 75 ரன்கள் எனும் எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணி 18.4 ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை இழந்த நிலையில் எட்டி வெற்றி பெற்றது. இதன் மூலம் ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்திய மகளிர் அணி முதல்முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றியைப் பெற்று வரலாறு படைத்துள்ளது.