முத்தரப்பு டி20 தொடர் : மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தியது இந்திய மகளிர் அணி!
தென்னாப்பிரிக்காவின் ஈஸ்ட் லண்டனில் உள்ள பஃபலோ பார்க் மைதானத்தில் நடைபெற்ற முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் ஆறாவது போட்டியில் திங்கட்கிழமை (ஜனவரி 30) இந்திய மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணியை வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இந்தியாவின் தீப்தி ஷர்மா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து களமிறங்கிய இந்திய மகளிர் அணி 13.5 ஓவர்களிலேயே இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் தொடக்க வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆட்டமிழக்காமல் 42 ரன்கள் எடுத்தார். தீப்தி சர்மா ஆட்ட நாயகி விருதை வென்றார்.
முத்தரப்பு டி20 இறுதிப்போட்டியில் இந்திய மகளிர் அணி
இந்தியா, தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளின் மகளிர் அணியினர் பங்கேற்கும் முத்தரப்பு டி20 தொடர் ஜனவரி 19 ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. நேற்றுடன் (ஜனவரி 30) லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணி தாங்கள் விளையாடிய 4 போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியது. தென்னாப்பிரிக்க அணி 4 போட்டிகளில் இரண்டு வெற்றியும், ஒரு தோல்வியும் ஒரு போட்டி முடிவில்லாமல் முடித்தது. இந்திய அணி 4 போட்டிகளில் 3 வெற்றி மற்றும் ஒரு போட்டி முடிவில்லாமலும் முடித்த நிலையில், புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் இறுதிப் போட்டியில் பிப்ரவரி 2 ஆம் தேதி மோதுகின்றன.