14 வயதில் உலகத்தையே மிரளவைத்த வைபவ்; இங்கிலாந்தை துவம்சம் செய்து 6வது முறையாக யு19 உலகக்கோப்பையைக் கைப்பற்றியது இந்தியா
செய்தி முன்னோட்டம்
ஜிம்பாப்வேயின் ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்பில் நடைபெற்ற 2026 யு19 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில், இளம் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை வரலாற்றில் 6 வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ஒரே அணி என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இதற்கு முன் 2000, 2008, 2012, 2018 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் இந்தியா இக்கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
சாதனை
வைபவ் சூர்யவன்ஷியின் சாதனை இன்னிங்ஸ்
இந்தப் போட்டியின் நாயகனாகத் திகழ்ந்தவர் 14 வயதேயான தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி. அவர் வெறும் 80 பந்துகளில் 15 பவுண்டரிகள் மற்றும் 15 சிக்ஸர்களுடன் 175 ரன்கள் குவித்து கிரிக்கெட் உலகையே வியக்க வைத்தார். அவர் 150 ரன்களை வெறும் 71 பந்துகளில் எட்டினார், இது யு19 கிரிக்கெட் வரலாற்றில் மிகவேகமான 150 ரன்களாகும். யு19 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஒரு வீரர் எடுத்த அதிகபட்ச ரன் இதுவேயாகும் (இதற்கு முன் உன்முக்த் சந்த் 111 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது). இந்தத் தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய சூர்யவன்ஷி, இறுதிப்போட்டியின் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் ஆகிய இரு விருதுகளையும் தட்டிச் சென்றார்.
இலக்கு
இந்திய அணியின் இமாலய இலக்கு
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, கேப்டன் ஆயுஷ் மாத்திரேவின் (53 ரன்கள்) நிதானமான ஆட்டம் மற்றும் வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடியால் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 411 ரன்கள் குவித்தது. இது யு19 உலகக்கோப்பை இறுதிப்போட்டி வரலாற்றில் ஒரு அணி எடுத்த அதிகபட்ச ஸ்கோர் ஆகும். இறுதியில் அபிக்யான் குந்து (40) மற்றும் கனிஷ்க் சௌகான் (37*) ஆகியோர் அணியின் ஸ்கோரை 400 ஐ கடக்க உதவினர்.
இங்கிலாந்து போராட்டம்
இங்கிலாந்தின் போராட்டமும் இந்தியப் பந்துவீச்சும்
412 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து கிரிக்கெட் அணி 40.2 ஓவர்களில் 311 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இங்கிலாந்து அணியின் கலெப் ஃபால்கனர் தனி ஆளாகப் போராடி 67 பந்துகளில் 115 ரன்கள் எடுத்தார். இருப்பினும், இந்தியப் பந்துவீச்சாளர்களின் துல்லியமான தாக்குதலால் இங்கிலாந்தால் வெற்றியை நெருங்க முடியவில்லை. இந்திய அணி தரப்பில் ஆர்.எஸ்.அம்ரிஷ் 3 விக்கெட்டுகளையும், தீபேஷ் தேவேந்திரன் மற்றும் கனிஷ்க் சௌகான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி வெற்றியை உறுதி செய்தனர்.