
இந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட் : மீண்டும் அணியில் இணைந்தார் விராட் கோலி
செய்தி முன்னோட்டம்
இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையே செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 26) செஞ்சூரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது.
இந்த போட்டிக்கு முன்னதாக, குடும்ப அவசரநிலை காரணமாக இந்தியா வந்ததாக கூறப்பட்ட விராட் கோலி, தென்னாப்பிரிக்கா சென்று மீண்டும் அணியில் இணைந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக விராட் கோலி லண்டன் பயணத்தை மேற்கொண்டதாகவும், அதனால்தான் அவர் அணியின் பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்கவில்லை என்றும் பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, அவர் குடும்ப அவசர நிலை காரணமாக இந்தியா வரவில்லை என்றும், உண்மையில் லண்டன் சென்றார் என்றும் கூறப்பட்டுள்ளது.
Virat Kohli rejoins Team India Test Squad in South Africa
லண்டன் பயணம் குறித்து முன்கூட்டியே அறிவிப்பு
பிசிசிஐ அதிகாரி இது குறித்து கூறுகையில், "இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்காததற்கு குடும்ப அவசரநிலை காரணம் அல்ல.
அந்த சமயத்தில் அவர் லண்டன் சென்றுள்ளார். மேலும், இந்த லண்டன் பயணம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு பிசிசிஐக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது." என கூறியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 19ஆம் தேதி லண்டனுக்குச் செல்வதற்கு முன்பு விராட் கோலி அணியுடன் பல பயிற்சி அமர்வுகளை மேற்கொண்டதாகவும், செஞ்சூரியனில் அணியில் சேர்ந்த பிறகு மீண்டும் பயிற்சியைத் தொடங்குவார் என்றும் பிசிசிஐ அதிகாரி மேலும் தெரிவித்தார்.