இந்தியா vs நியூசிலாந்து 3வது டி20 : அரைசதம் அடிக்க முடியவில்லையே! வருத்தத்தில் ராகுல் திரிபாதி!
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டியில் இந்திய டாப்-ஆர்டர் பேட்டர் ராகுல் திரிபாதி அரைசதம் அடிக்க முடியாமல் போனதால் வருந்துவதாக கூறியுள்ளார். ஷுப்மான் கில் அதிரடியை தொடங்கும் முன், இந்தியாவின் இன்னிங்ஸை திரிபாதி தான் வேகப்படுத்தினார். திரிபாதி அதிரடியாக ஆடி 22 பந்தில் 44 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இஷ் சோதியின் ஷார்ட் பந்தில் கேட்ச் கொடுத்தார். இந்நிலையில், போட்டிக்கு பிந்தைய பேட்டியில் பேசிய திரிபாதி, மேலும் சில ரன்கள் எடுத்திருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருப்பேன் என்று கூறினார். மேலும், தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தனது இயல்பான ஆட்டத்தை விளையாடச் சொன்னதாக அவர் தெரிவித்தார்.
சர்வதேச டி20 போட்டிகளில் ராகுல் திரிபாதியின் பெர்ஃபார்மான்ஸ்
ராகுல் திரிபாதி ஜனவரி 2023இல் இந்தியா வந்த இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் முதல் முறையாக களமிறங்கினார். தனது முதல் போட்டியில் வெறும் 5 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். தொடர்ந்து அடுத்த போட்டியில் 35 ரன்கள் எடுத்தார். இதையடுத்து தற்போது நடந்து முடிந்த நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இடம் பிடித்த ராகுல் திரிபாதி முதல் போட்டியில் 0 மற்றும் இரண்டாவது போட்டியில் 13 என தொடர்ந்து சொதப்பி வந்தார். இந்நிலையில், புதன்கிழமை (பிப்ரவரி 1) நடந்த போட்டியில், சிறப்பாக ஆடி 44 ரன்களை குவித்துள்ளார். இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள திரிபாதி 19.40 என்ற சராசரியில், 144.78 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் 97 ரன்கள் எடுத்துள்ளார்.