இந்தியா vs ஆஸ்திரேலியா நான்காவது T20I : ராய்ப்பூர் மைதானத்தின் புள்ளி விபரம்
இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான நான்காவது டி20 போட்டி வெள்ளிக்கிழமை ராய்ப்பூரில் உள்ள ஷாஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. ஐந்து போட்டிகள் இந்த தொடரில் மூன்று போட்டிகள் முடிந்துள்ள நிலையில், இந்திய அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியைத் தழுவி இருந்தாலும், மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்று மீண்டெழுந்து வந்துள்ளது. ராய்ப்பூர் மைதானத்தைப் பொறுத்தவரை, இதுவரை ஒரே ஒரு சர்வதேச கிரிக்கெட் போட்டி மட்டுமே நடந்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து மோதிய அந்த ஒருநாள் போட்டியில் இந்தியா நியூசிலாந்தை 108 ரன்களில் சுருட்டி வெற்றி பெற்றது.
ராய்ப்பூர் மைதானத்தில் டி20 போட்டிகளின் புள்ளிவிபரம்
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் டி20 போட்டிதான் இங்கு நடக்கும் முதல் சர்வதேச டி20 போட்டியாகும். இந்தியாவின் மிகப் பெரிய மைதானங்களில் ஒன்றாகப் போற்றப்படும் ராய்ப்பூரில் உள்ள இந்த மைதானம், சாம்பியன்ஸ் லீக் டி20யின் 8 போட்டிகளை மட்டும் நடத்தியுள்ளது. இங்கு நடந்த 6 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணி 2 முறை மட்டுமே வென்றுள்ள நிலையில், இரண்டாவது பேட்டிங் செய்த அணி 4 முறை வென்றுள்ளது. மைதானத்தில் ஒரு அணியின் சராசரி மொத்த பேட்டிங் 146 ஆகும். எனினும், சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகள் எதுவும் இந்த மைதானத்தில் நடக்காத நிலையில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான போட்டி மைதானத்தின் தன்மையை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.