இந்தியா vs ஆஸ்திரேலியா ஐந்தாவது T20I : சின்னச்சாமி ஸ்டேடியத்தின் புள்ளிவிபரங்கள்
இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் ஞாயிற்றுக்கிழமை (டிச.3) மோத உள்ளன. பெங்களூரில் உள்ள எம் சின்னசாமி ஸ்டேடியத்தில் இரவு 7.00 மணிக்கு போட்டி தொடங்க உள்ளது. ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய கிரிக்கெட் அணி ஏற்கனவே 3-1 என தொடரை கைப்பற்றிய நிலையில், டிசம்பர் 10 ஆம் தேதி தொடங்கும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கு முன் நடக்கும் இந்த போட்டியை வெற்றியுடன் நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளது. டி20 கிரிக்கெட் வரலாற்றில் இந்த மைதானத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதில்லை என்ற மோசமான சாதனை இருந்தபோதிலும், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அணி அந்த வரலாற்றை மாற்றி எழுதும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சின்னைச்சாமி ஸ்டேடியத்தில் இந்தியா vs ஆஸ்திரேலியா நேருக்கு நேர்
எம்.சின்னசாமி மைதானத்தில் இந்தியா 6 டி20 கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளது. இதில் இரண்டு ஆட்டங்களில் வெற்றியும், மூன்றில் தோல்வியும் அடைந்த நிலையில், ஒரு ஆட்டம் முடிவு ஏதுமின்றி முடிந்தது. மாறாக, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்த மைதானத்தில் இரண்டு போட்டிகளில் விளையாடி, இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளும் நேருக்கு நேர் ஒரு போட்டியில் மட்டுமே இங்கு மோதியுள்ள நிலையில், அதில் இந்தியா தோல்வியைத் தழுவியது. எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் டி20 போட்டியில் இந்தியாவின் சராசரி ஸ்கோர் 138 ரன்கள் ஆகும். 2017ல் இங்கிலாந்துக்கு எதிராக 202/6 ரன்கள் எடுத்ததே இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோர் ஆகும். அந்த ஆட்டத்தில் இந்தியா 75 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.