இந்தியா vs ஆஸ்திரேலியா மூன்றாவது T20I : இந்திய அணியில் தமிழக ஆல்ரவுண்டருக்கு வாய்ப்பு?
முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற பிறகு, சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி செவ்வாய்க்கிழமை (நவம்பர் 28) மூன்றாவது டி20 போட்டியில் மேத்யூ வேட் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை எதிர்கொள்கிறது. கவுகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடக்க உள்ள இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை கைப்பற்றுவதற்கான வாய்ப்பை தக்கவைக்க முடியும் என்ற நெருக்கடியில் ஆஸ்திரேலியா உள்ளது. இதற்கிடையே, முதல்முறையாக ஒரு தொடரில் கேப்டனாக களமிறங்கியுள்ள சூர்யகுமார் யாதவ், இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்புடன் உள்ளார். இதனால் முதல் இரண்டு போட்டிகளில் சரியாக செயல்படாத சில வீரர்களை நீக்கிவிட்டு அவர்களுக்கு பதிலாக புதிய வீரர்களை களமிறக்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்திய அணியில் இரண்டு வீரர்களை மாற்ற திட்டம்
மேலே குறிப்பிட்டுள்ளபடி, மூன்றாவது போட்டியில், கேப்டன் சூர்யகுமார் யாதவ் விளையாடும் லெவன் அணியில் இரண்டு மாற்றங்களைச் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி நட்சத்திர இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்குக்கு பதிலாக, ஆவேஷ் கானை சேர்க்கலாம். அர்ஷ்தீப் முதல் இரண்டு போட்டிகளில் ஓவருக்கு 10க்கும் அதிகமான எகானமியில் ரன்களை விட்டுக்கொடுத்துள்ளார். இவரைத் தவிர, முதல் இரண்டு போட்டிகளில் சிறப்பாக செயல்படாத அக்சர் படேலுக்குப் பதிலாக, தமிழக ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்படலாம். எதிர்பார்க்கப்படும் விளையாடும் லெவன் : யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான், முகேஷ் குமார் மற்றும் பிரசித் கிருஷ்ணா.