டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் வரலாறு: 2007 முதல் 2024 வரையிலான ஒரு தொகுப்பு
செய்தி முன்னோட்டம்
உலக கிரிக்கெட்டின் 'சக்திவாய்ந்த மையமாக' கருதப்படும் இந்திய அணியின் டி20 உலகக் கோப்பை பயணம் வரலாற்று சிறப்புமிக்கது, ஏற்ற தாழ்வுகள் மற்றும் உற்சாகங்கள் நிறைந்தது. 2007 ஆம் ஆண்டு மகேந்திர சிங் தோனி தலைமையில் முதல் பதிப்பில் பட்டத்தை வென்று பரபரப்பை ஏற்படுத்திய பிறகு, இரண்டாவது பட்டத்திற்காக இந்தியா 17 நீண்ட ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. இறுதியாக, 2024 ஆம் ஆண்டு, ரோஹித் சர்மாவின் தலைமையில், இந்தியா அந்த வறட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து மீண்டும் உலக சாம்பியன் கிரீடத்தை வென்றது. வரும் 2026 டி20 உலக கோப்பையை இந்தியாவும், இலங்கையும் இணைந்து நடத்தப் போகின்றன. இந்த நிலையில் இந்திய அணி கடந்து வந்த பாதை குறித்து ஒரு பார்வை.
2007
கன்னி முயற்சியிலேயே முத்திரை
எம்.எஸ்.தோனி தலைமையில் இளம் வீரர்களுடன் களம் இறங்கிய இந்தியா, முதல் டி20 உலகக் கோப்பையிலேயே சாம்பியன் பட்டம் வென்று உலகையே வியக்க வைத்தது. இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாறு படைத்தது. கௌதம் கம்பீர் (227 ரன்கள்) மற்றும் ஆர்.பி. சிங் (12 விக்கெட்டுகள்) இந்த வெற்றிக்குத் தூணாக விளங்கினர்.
2009 - 2012
சரிவுகளும் ஏமாற்றங்களும்
2007-க்கு பிறகு வந்த சில தொடர்கள் இந்தியாவுக்குச் சாதகமாக அமையவில்லை. 2009 மற்றும் 2010 தொடர்களில் இந்தியா சூப்பர்-8 சுற்றோடு வெளியேறியது. 2012-ல் 5-ல் 4 போட்டிகளில் வெற்றி பெற்றும், 'நெட் ரன் ரேட்' காரணமாக அரையிறுதி வாய்ப்பை இழந்தது.
2014 - 2016
கோப்பைக்கு அருகில் வந்து நழுவியது
2014-ல் இறுதிப்போட்டி வரை சென்ற இந்தியா, இலங்கையிடம் தோல்வியுற்று இரண்டாம் இடம் பிடித்தது. 2016-ல் சொந்த மண்ணில் நடைபெற்ற தொடரில் அரையிறுதி வரை முன்னேறி மேற்கிந்தியத் தீவுகளிடம் தோற்றது. விராட் கோலி இந்தத் தொடர்களில் தனது அபார ஆட்டத்தால் உலகையே கவர்ந்தார்.
2021 - 2022
ஏமாற்றம் மற்றும் புதிய நம்பிக்கை
2021 உலகக் கோப்பை இந்தியாவுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது; குரூப் சுற்றிலேயே வெளியேறியது. 2022-ல் ரோஹித் சர்மா தலைமையில் அரையிறுதி வரை சென்றும், இங்கிலாந்திடம் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இருப்பினும், பாகிஸ்தானுக்கு எதிராக கோலி ஆடிய 82* ரன்கள் இன்னிங்ஸ் வரலாற்றில் இடம்பெற்றது.
2024
17 ஆண்டுகாலக் காத்திருப்பு முடிவு
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, 2024-ல் ஒரு போட்டியிலும் தோல்வியடையாமல் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. பரபரப்பான இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, 17 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாவது முறையாக டி20 உலகக் கோப்பையை உச்சி முகர்ந்தது. விராட் கோலி இறுதிப்போட்டியில் 76 ரன்கள் எடுத்து 'ஆட்டநாயகன்' விருது வென்றார். இந்த வெற்றிக்குப் பின், ஜாம்பவான்களான ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றனர்.