தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை உட்கொண்ட இந்திய முன்னணி வீராங்கனைக்கு நான்கு ஆண்டுகள் தடை
ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்ததற்காக ஆசிய விளையாட்டுப் போட்டியில் இரண்டு முறை வெள்ளி வென்ற தடகள வீராங்கனை டூட்டி சந்திற்கு நான்கு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. 2021 இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் 4 இன் போது 11.17 வினாடிகளில் 100 மீட்டர் ஓடி புதிய தேசிய சாதனையையும் டூட்டி சந்த் படைத்திருந்தார். முன்னதாக, 2022 டிசம்பரில் தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு முகமை மூலம் டூட்டி சந்த் இரண்டு முறை பரிசோதிக்கப்பட்டார். அப்போது தடைசெய்யப்பட்ட அனபோலிக் ஸ்டெராய்டு பயன்படுத்தியது தெரியவந்ததை அடுத்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில், அதன் விசாரணைகள் முடிந்து தற்போது நான்கு ஆண்டுகள் தடை உறுதி செய்யப்பட்டுள்ளது.
டூட்டி சந்த் மேல்முறையீடு செய்ய 21 நாட்கள் அவகாசம்
தடகள வீராங்கனை டூட்டி சந்திற்கு விதிக்கப்பட்டுள்ள நான்கு ஆண்டுகள் தடை ஜனவரி 3, 2023 முதல் தடை தொடங்குகிறது. மேலும் சோதனைக்காக அவரது மாதிரி சேகரிக்கப்பட்ட தேதியிலிருந்து (டிசம்பர் 5, 2022) அவர் பெற்ற அனைத்து போட்டி முடிவுகளும் தகுதி நீக்கம் செய்யப்படும். அதே நேரத்தில் அவர் பெற்ற பதக்கங்கள், புள்ளிகள் மற்றும் பரிசுகளை இழக்க நேரிடும். எனினும், இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய டூட்டி சந்திற்கு 21 நாட்கள் அவகாசம் உள்ளது. இதற்கிடையே, தடை செய்யப்பட்ட போதைப்பொருளை தான் உட்கொண்டது தெரியாமல் நடந்த விஷயம் எனக் கூறியுள்ள டூட்டி சந்த் தரப்பு, தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும், அதில் நல்ல முடிவு கிடைக்கும் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.