ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பையில் இந்திய அணி இல்லை.. ஆனாலும் படைத்த பிரம்மாண்ட உலக சாதனை
செய்தி முன்னோட்டம்
ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளில் இந்திய கால்பந்து அணி விளையாடவில்லை என்றாலும், சமூக வலைத்தளங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களில் உலகக்கோப்பைக்கான மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. கோரஸ் என்ற கிரியேட்டர் இன்டெலிஜென்ஸ் தளம் நடத்திய புதிய ஆய்வின்படி, ஃபிஃபா அமைப்பின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தைப் பின்தொடரும் 6.05 கோடி ரசிகர்களில், சுமார் 10.21 சதவீதத்தினர் இந்தியர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதன் மூலம் அமெரிக்கா, அர்ஜென்டினா போன்ற நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா உலக அளவில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.
ரொனால்டோ
போர்ச்சுகல் மக்கள் தொகையை விட ரொனால்டோவை பின்பற்றும் இந்தியர்களே அதிகம்
இந்திய ரசிகர்களின் இந்த அசாத்திய கால்பந்து மோகத்திற்குப் பிரதான காரணமாக விளங்குவது தனிநபர் வீரர்களின் மீதான ஈர்ப்பு தான். குறிப்பாகப் போர்ச்சுகல் நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையை விட, இன்ஸ்டாகிராமில் கிறிஸ்டியானோ ரொனால்டோவை பின்தொடரும் இந்திய ரசிகர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகும். ரொனால்டோவின் 66.6 கோடி சர்வதேச ஃபாலோயர்ஸ்களில் 12.2 சதவீதத்தினர் (சுமார் 8.13 கோடி பேர்) இந்தியர்கள் ஆவர். இவருக்கு அடுத்தபடியாக அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி 5.66 கோடி இந்திய ஃபாலோயர்ஸ்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
கிரியேட்டர்கள்
35,000 இந்திய கிரியேட்டர்களால் எகிறும் இன்ஸ்டாகிராம் லைக்குகள்
இந்தியாவில் இந்த உலகக்கோப்பை அலையை வெறும் விளையாட்டுத் துறை சார்ந்தவர்கள் மட்டுமின்றி, ஃபிட்னஸ் மற்றும் டிராவல் கிரியேட்டர்களும் இணைந்து ஒரு கலாச்சார நிகழ்வாக மாற்றி வருகின்றனர். தற்போதைய நிலவரப்படி, சுமார் 35,000க்கும் மேற்பட்ட இந்திய இன்ஸ்டாகிராம் கிரியேட்டர்கள் உலகக்கோப்பை சார்ந்த உள்ளடக்கங்களை இடைவிடாது பதிவிட்டு வருகின்றனர். இவர்களின் பதிவுகள் சராசரியாக 3 சதவீத என்கேஜ்மென்ட் ரேட்டை பெற்று வருவதால், சர்வதேச பிராண்டுகளின் பார்வை இந்திய சந்தையின் மீது திரும்பியுள்ளது.
ஜெர்சி விற்பனை
டெகத்லான் கடைகளில் காலியான போர்ச்சுகல் ஜெர்சிகள்
சமூக வலைத்தளங்களில் நிலவும் இந்த கால்பந்து காய்ச்சல் தற்பொழுது வணிக ரீதியாகவும் பெரிய விற்பனை உயர்வை ஏற்படுத்தியுள்ளது. பிரபல விளையாட்டு உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனம் ஒன்றின் கால்பந்து மற்றும் காலணிகளின் விற்பனை கடந்த ஆண்டை விட 30 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேபோல், பிரபல சில்லறை விற்பனை நிறுவனமான டெகத்லான், தங்களது உலகக்கோப்பை விளையாட்டு ஆடைகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவை போட்டிகள் தொடங்குவதற்கு முன்பே விற்றுத் தீர்ந்துவிட்டதாகவும், குறிப்பாக மும்பை, கேரளா, கொல்கத்தா மற்றும் டெல்லி ஆகிய நகரங்களில் போர்ச்சுகல் அணி சார்ந்த ஆடைகளுக்குப் பிரம்மாண்ட வரவேற்பு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
மெகா சந்தை
விளம்பரதாரர்களுக்கு கிரிக்கெட்டுக்கு அடுத்தபடியாகக் கிடைத்த மெகா சந்தை
இந்தியாவில் தற்பொழுது சுமார் 30 கோடிக்கும் அதிகமான கால்பந்து பார்வையாளர்கள் இருப்பதாக விளம்பர முகமைகள் தெரிவிக்கின்றன. இதனால் நடுத்தர நிறுவனங்கள் முதல் முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்கள் வரை ₹25 லட்சம் முதல் ₹1 கோடி வரையிலான பட்ஜெட்டில் சமூக வலைத்தளக் கிரியேட்டர்களைக் கொண்டு தங்களது பிராண்டுகளை விளம்பரம் செய்யத் தொடங்கியுள்ளனர். கிரிக்கெட்டிற்கு அடுத்தபடியாக இந்தியாவில் கால்பந்து விளையாட்டு மிக வேகமாக வர்த்தகமயமாகி வருவதை இந்தத் தரவுகள் தெளிவாகக் காட்டுகின்றன.