ஒரு இன்னிங்சில் அதிகபட்ச ரன்ரேட்; டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா வரலாற்று சாதனை
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி தனது ஆக்ரோஷமான பேட்டிங் மூலம் பல சாதனைகளை படைத்துள்ளது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 438 ரன்கள் எடுத்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 255 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் 183 ரன்கள் முன்னிலையுடன் போட்டியின் நான்காவது நாளில் (ஜூலை 23) இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்தியா, அதே நாளில் 181 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளர் செய்தது. இதன் மூலம், குறைந்தபட்சம் 20 ஓவர்கள் விளையாடிய டெஸ்ட் இன்னிங்ஸ்களில், இந்தியாவின் ரன்ரேட் 7.54 ஆக இருந்தது.
இஷான் கிஷன் அதிகபட்ச தனிநபர் ஸ்ட்ரைக் ரேட்
இந்திய அணியின் 7.54 ரன் ரேட் டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை எந்தவொரு நாடும் எட்டாத உயரமாகும். இதற்கு முன்னதாக, 2017ல் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய ஆஸ்திரேலியாவின் 7.53 என்ற ரன் ரேட்டை அதிகபட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, இஷான் கிஷன் 34 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 52 ரன்கள் எடுத்தார். அவரது ஸ்டிரைக் ரேட் 152.94 இப்போது ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் 50 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை எடுத்த விக்கெட் கீப்பர்களில் மூன்றாவது அதிகபட்சமாக உள்ளது. ஆடம் கில்கிறிஸ்ட் (172.88), ரிஷப் பந்த் (161.29) மட்டுமே அவருக்கு முன்னால் உள்ளனர். மேலும், இந்தியர்களில், அவரது ஸ்ட்ரைக் ரேட் ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் நான்காவது அதிகபட்சமாக உள்ளது.