உயரம் தாண்டுதலில் உலக சாம்பியனை வீழ்த்தி தங்கம் வென்றார் இந்திய வீரர் தேஜஸ்வின் சங்கர்!
ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 5) பாஸ்டனில் நடைபெற்ற நியூ பேலன்ஸ் இன்டோர் கிராண்ட் பிரிக்ஸில் இந்திய நட்சத்திர தடகள வீரர் தேஜஸ்வின் சங்கர் வெற்றி பெற்று முதலிடம் பிடித்துள்ளார். 2007 உலக சாம்பியன்ஷிப் மற்றும் 2010 காமன்வெல்த் தங்கப் பதக்கம் வென்ற 38 வயதான தாமஸை, 24 வயதான இந்தியர் தேஜஸ்வின் உயரம் தாண்டுதலில் 2.26 மீட்டர் தாண்டி முதலிடம் பிடித்தார். கிராண்ட் பிரிக்ஸில் தேஜஸ்வின் தனது நான்கு முயற்சிகளில், நான்காவது மற்றும் கடைசி முயற்சியில் தான் 2.26 மீட்டர் தாண்டினார். இரண்டாவது இடம் பிடித்த தாமஸ் அதிகபட்சமாக 2.23 மீட்டர் மட்டுமே தாண்டினார். அமெரிக்காவின் டாரில் சல்லிவன் 2.19 மீட்டர் தாண்டி நான்கு பேர் கொண்ட களத்தில் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.
புத்தாண்டிக்கான சிறந்த தொடக்கம் : வெற்றி குறித்து ட்வீட் வெளியிட்ட தேஜஸ்வின்
அவர் முதல் முயற்சியில் 2.14 மீட்டரும், இரண்டாவது முயற்சியில் 2.19 மீட்டரும், மூன்றாவது முயற்சியில் 2.23 மீட்டரும் தாண்டிய நிலையில், கடைசி முயற்சியில் 2.26 மீட்டர் தாண்டி தங்கத்தை வென்றார். தங்கம் வென்ற வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்த தேஜஸ்வின், "புத்தாண்டுக்கான சிறந்த தொடக்கம்! சிறந்த வீரர்களுடன் போட்டியிடுவதில் உற்சாகமாக உள்ளது." எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக, தேஜஸ்வின் கடந்த 2022 பர்மிங்காம் காமன்வெல்த் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார். தேஜஸ்வின் தனிப்பட்ட முறையில் 2.29 மீட்டர் வெளிப்புறத்தில் பாய்ந்து தேசிய சாதனை படைத்துள்ளார். அதே சமயம் உள்ளரங்க போட்டியில் அவரது சிறந்த உயரம் தாண்டுதல் 2.28 மீட்டர் ஆகும். இவை இரண்டும் முறையே 2018இல் லுபாக் மற்றும் எய்ம்ஸில் சாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.