Page Loader
CT 2025: ஒருநாள் போட்டிகளில் நெதர்லாந்தின் சோகமான சாதனையை சமன் செய்தது இந்தியா
ஒருநாள் போட்டிகளில் சோகமான சாதனையை சமன் செய்தது இந்தியா

CT 2025: ஒருநாள் போட்டிகளில் நெதர்லாந்தின் சோகமான சாதனையை சமன் செய்தது இந்தியா

எழுதியவர் Sekar Chinnappan
Feb 20, 2025
03:36 pm

செய்தி முன்னோட்டம்

சாம்பியன்ஸ் டிராபி 2025 இல் வியாழக்கிழமை (பிப்ரவரி 20) வங்கதேசத்திற்கு எதிரான முதல் போட்டியில் இந்தியா களமிறங்கிய நிலையில், மோசமான ஒரு சாதனையை சமன் செய்துள்ளது. முன்னதாக, துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி டாஸை இழந்தது. இந்தியா இப்போது ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ச்சியாக 11 முறை டாஸை இழந்துள்ளது. மேலும், இதன் மூலம், ஒருநாள் கிரிக்கெட்டில் மார்ச் 2011 முதல் ஆகஸ்ட் 2013 வரை தொடர்ந்து 11 போட்டிகளில் டாஸை இழந்த நெதர்லாந்தின் மோசமான சாதனையை சமன் செய்துள்ளது. இந்தியா கடைசியாக 2023 ஒருநாள் உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக களமிறங்கியபோது கடைசியாக டாஸ் வென்றது குறிப்பிடத்தக்கது.

செயல்திறன்

இந்திய கிரிக்கெட் அணியின் செயல்திறன்

இந்த சோகமான சாதனை ஒருபுறம் இருந்தாலும், சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை 3-0 என வென்றதன் மூலம் இந்தியா வலுவான ஃபார்மில் உள்ளது. போட்டியின் நிலைமைகளை தீர்மானிப்பதில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கிறது என்றாலும், இந்தியா இந்த பின்னடைவைச் சமாளித்து சாம்பியன்ஸ் டிராபியை வென்று ரோஹித் ஷர்மா & கோ அணி சாதனை படைக்கும் என இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் நம்புகின்றனர். இதற்கிடையே, இன்றைய போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வரும் வங்கதேச கிரிக்கெட் அணி பவர்பிளே முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 39 ரன்களுடன் தடுமாறி வருகிறது. முகமது ஷமி மற்றும் அக்சர் படேல் தலா 2 விக்கெட்டுகளையும், ஹர்ஷித் ராணா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.