எஸ்ஏஎப்எப் யு19 சாம்பியன்ஷிப்பில் பாகிஸ்தானை வீழ்த்தி பட்டம் வென்றது இந்தியா
சனிக்கிழமை (செப்டம்பர் 30) நடைபெற்ற ஆடவர் யு19 எஸ்ஏஎப்எப் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா பட்டம் வென்றது. நேபாள தலைநகர் காத்மாண்டுவில் உள்ள தசரத ரங்கஸ்தல மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில், பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொண்ட இந்திய கால்பந்து அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணிக்காக மங்லென்தாங் கிப்ஜென் (64′, 85′) மற்றும் கே கோயாரி (90+5′) ஆகியோர் கோல் அடித்தனர். இது யு19 கால்பந்து எஸ்ஏஅப்எப் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவிற்கு எட்டாவது பட்டமாகும். இதன் மூலம், தெற்காசியாவில் உள்ள கால்பந்து அணிகளில் இந்தியா தனது மேலாதிக்கத்தை மீண்டும் நிலைநாட்டியுள்ளது.
எஸ்ஏஎப்எப் யு19 சாம்பியன்ஷிப்பில் இந்தியா கடந்து வந்த பாதை
எஸ்ஏஎப்எப் யு19 கால்பந்து சாம்பியன்ஷிப்பில் இந்திய அணி பூட்டான் மற்றும் வங்கதேசத்துடன் குழு பி'யில் இடம் பெற்றிருந்தது. குழுநிலை ஆட்டத்தில் பூட்டானை 2-1 என்ற கோல் கணக்கிலும், வங்கதேசத்தை 3-0 என்ற கோல் கணக்கிலும் வீழ்த்தி வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து நடந்த அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி நேபாளத்தை எதிர்கொண்ட நிலையில் போட்டி 1-1 என டை ஆனது. இதையடுத்து பெனால்டி கார்னர் மூலம் இந்தியா 3-2 என்ற கோல் கணக்கில் நேபாளத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதைத் தொடர்ந்து இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது. அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டியில் இந்திய அணி வெல்வதற்கு கிப்ஜென் முக்கிய பங்கு வகித்தார்.