ஓபன் செஸ் ஒலிம்பியாட்டில் முதல்முறையாக தங்கம் வென்று வரலாறு படைத்தது இந்தியா
ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 22) ஹங்கேரியில் நடைபெற்ற ஓபன் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா முதல் முறையாக தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளது. இந்த போட்டியில் ஆரம்பம் முதல் தொடர்ந்து 8 வெற்றிகளைப் பெற்ற இந்தியா, நடப்பு சாம்பியனான உஸ்பெகிஸ்தானுக்கு எதிரான போட்டியை டிராவில் முடித்தது. எனினும், அதன் பின்னர் விரைவாக வெற்றிப் பாதைக்குத் திரும்பிய இந்தியா, இறுதிச் சுற்றில் முதலிடத்தில் இருந்த அமெரிக்காவை வீழ்த்தி பட்டத்தை கிட்டத்தட்ட இறுதி செய்தது. மேலும், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கடைசி ஆட்டத்தில் ஸ்லோவேனியாவுக்கு எதிராக இந்தியா விளையாடியது. இதில் அர்ஜுன் எரிகைசி முதல் வெற்றியை பெற்றுத் தர, டி குகேஷ் மற்றும் ஆர் பிரக்ஞானந்தா அடுத்தடுத்து வெற்றிகளைக் குவித்து இந்தியாவுக்கு தங்கப் பதக்கத்தை உறுதி செய்தனர்.