ஆஸ்திரேலியா பிரைம் மினிஸ்டர் லெவன் அணிக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி வெற்றி
பார்டர் கவாஸ்கர் டிராபியின் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக கான்பெராவில் உள்ள மனுகா ஓவலில் மழையால் பாதிக்கப்பட்ட பிங்க்-பால் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் பிரைம் மினிஸ்டர் லெவன் அணிக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஒருநாள் கிரிக்கெட் போட்டியாக நடத்த திட்டமிடப்பட்ட இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியாவின் பிரைம் மினிஸ்டர் லெவன் அணி 43.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சாம் கொன்ஸ்டாஸ் 107 ரன்களும், ஹன்னா ஜேக்கப்ஸ் 61 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியில் சிறப்பாக பந்துவீசிய ஹர்ஷித் ராணா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
மழையால் 46 ஓவர்களாக போட்டி குறைப்பு
மீண்டும் மழை பெய்த நிலையில், போட்டி 46 ஓவர்களாக குறைக்கப்பட்ட நிலையில், இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 45 ரன்களும், கே.எல்.ராகுல் 27 ரன்களும் எடுத்தனர். ஷுப்மன் கில் 50 ரன்களும், நிதிஷ் ரெட்டி மற்றும் வாஷிங்டன் சுந்தர் தலா 42 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 27 ரன்களும் எடுத்தனர். முதல் போட்டியில் விளையாடாத கேப்டன் ரோஹித் ஷர்மா இதில் 3 ரன்களில் அவுட்டானார். முன்னதாக, பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றுள்ள இந்தியா, டிசம்பர் 6 அன்று அடிலெய்டில் இரண்டாவது போட்டியில் விளையாட உள்ளது.