ஃபிஃபா அண்டர் 15 உலகக் கோப்பை: லாவோஸை 4-2 என வீழ்த்தி இந்தியா அபார வெற்றி
செய்தி முன்னோட்டம்
அசர்பைஜான் தலைநகர் பாகுவில் உள்ள ஹோவ்சன் விளையாட்டு வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற முதலாவது ஃபிஃபா 15 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை மற்றும் திருவிழாக் கால்பந்து தொடரின் குரூப் கே பிரிவு தொடக்க ஆட்டத்தில், இந்திய ஜூனியர் அணி 4-2 என்ற கோல் கணக்கில் பலம் வாய்ந்த லாவோஸ் அணியை வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது. போட்டியின் தொடக்கம் முதலே ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி, ஃபிஃபா அதிகாரப்பூர்வ உலகக் கோப்பை அளவிலான கால்பந்து தொடர் ஒன்றில் தனது முதல் மூன்று புள்ளிகளைப் பெற்றுத் தொடரை வெற்றிகரமாகத் தொடங்கியுள்ளது.
அடுத்தடுத்து கோல்
முன்னிலை பெற்ற இந்தியா
தலைமைப் பயிற்சியாளர் பிபியானோ பெர்னாண்டஸின் வழிகாட்டுதலில் களமிறங்கிய இந்திய அணி, ஆட்டம் தொடங்கிய 7-வது நிமிடத்திலேயே முதல் கோலை அடித்தது.
தீபக் சிங் அராம்பம் லாவோஸ் அணியின் தடுப்பு எல்லையைக் கடந்து நேர்த்தியாக பாஸ் செய்ய, இந்திய அணியின் கேப்டன் மெக்டோனிஷ் அதை எளிதாக வலைக்குள் தள்ளி முதல் கோலை அடித்தார்.
அதனைத் தொடர்ந்து 11-வது நிமிடத்தில், லாவோஸ் வீரர்களின் பந்தை மறித்து லால்ரெம்ருவாட்ஃபேலா தனது இடது காலால் துல்லியமாக உதைத்து இந்தியாவின் முன்னிலையை 2-0 என உயர்த்தினார்.
இறுதிவரை ஆதிக்கம்
லாவோஸின் பதிலடியும் இந்தியாவின் திருப்புமுனையும்
லாவோஸ் வீரர்கள் அனாவின் ஜய்யாசோன் மற்றும் சுக்ஸவன் சிலிசெங் அடித்த அடுத்தடுத்த கோல்களால் ஆட்டம் 2-2 என சமனடைந்து கடும் பரபரப்பானது.
எனினும், 31-வது நிமிடத்தில் சவுமோஜித் சர்க்கார் கொடுத்த பாஸை லால்ரெம்ருவாட்ஃபேலா பெனால்டி பகுதிக்கு வெளியே இருந்து கோலாக்கி அசத்தினார்.
தொடர்ந்து 33-வது நிமிடத்தில், சவுமோஜித் சர்க்கார் மைதானத்தின் நடுப்பகுதியிலிருந்தே அசாத்தியமான முறையில் உதைத்த பந்து கோல்கீப்பரின் தலைக்கு மேலாகச் சென்று வலைக்குள் புகுந்தது.
இதன் மூலம் 4-2 என்ற முன்னிலையைப் பெற்ற இந்திய அணி இறுதிவரை ஆதிக்கம் செலுத்தி அபார வெற்றியை ருசித்தது.