மகளிர் டி20 உலகக்கோப்பை 2024க்கு நேரடியாக தகுதி பெற்றது இந்திய அணி
2024 மகளிர் டி20 உலகக்கோப்பைக்கு இந்தியா நேரடியாக தகுதி பெற்றுள்ளதாக ஐசிசி செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 28) அறிவித்தது. இதில் 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. இதற்கான தகுதி செயல்முறையின்படி 2023 உலகக்கோப்பையில் இரண்டு குழுக்களிலும் முதல் மூன்று இடங்களை பெற்ற அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. அதன்படி குழு "ஏ'வில் இருந்து ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளும், குழு "பி"யில் இருந்து இங்கிலாந்து, இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகியவை தகுதி பெற்றுள்ளன. இதர 4 அணிகளில் இருந்து நிகர ரன் ரேட் அடிப்படையில் முன்னிலையில் இருந்த பாகிஸ்தானும் ஏழாவது அணியாக தகுதி பெற்றுள்ளது. மேலும் போட்டியை நடத்தும் நாடு என்ற அடிப்படையில், வங்கதேசம் இதற்கு நேரடி தகுதி பெற்றுள்ளது.
நேரடி தகுதி வாய்ப்பை இழந்த இலங்கை மற்றும் அயர்லாந்து
2023 உலகக்கோப்பையில் நிகர ரன் ரேட் அடிப்படையில் மிகவும் தங்கியிருந்த இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகள் நேரடி தகுதி வாய்ப்பை இழந்துள்ளன. இந்நிலையில், மீதமுள்ள இரண்டு இடங்கள் 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறும் உலகளாவிய தகுதிச் சுற்று மூலம் தீர்மானிக்கப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது. உலகளாவிய தகுதிச் சுற்றுக்கள் போட்டியின் தேதிகள் மற்றும் இடங்கள் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என மேலும் தெரிவித்துள்ளது. முன்னதாக, 2023 மகளிர் டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி ஆறாவது முறையாக பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.