INDvsWI 2வது டி20 : சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் சாதனையை முறியடித்த திலக் வர்மா
ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 6) வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி தோல்வியைத் தழுவினாலும், இளம் வீரர் திலக் வர்மா குறிப்பிடத்தக்க இரண்டு சாதனைகளை செய்துள்ளார். முன்னதாக, இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. எளிமையான இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, 19 ஓவர்களிலேயே இலக்கை எட்டி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான திலக் வர்மா, தனது முதல் போட்டியில் 39 ரன்கள் எடுத்த நிலையில், இந்த போட்டியில் 51 ரன்கள் எடுத்தார்.
திலக் வர்மா படைத்த இரண்டு சாதனைகள்
திலக் வர்மா தற்போது, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது முதல் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து மொத்தமாக 90 ரன்கள் எடுத்துள்ளார். இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் தனது முதல் இரண்டு இன்னிங்ஸ்களில் மொத்தமாக அதிக ரன்கள் குவித்த வீரராக இருந்த சூர்யகுமார் யாதவின் (89 ரன்கள்) சாதனையை முறியடித்தார். இதற்கிடையே, திலக் வர்மா டி20 கிரிக்கெட்டில் அரைசதம் அடித்த இரண்டாவது இளம் இந்திய வீரராகவும் ஆனார். இந்த பட்டியலில் ரோஹித் ஷர்மா (20 வருடம் 143 நாட்கள்) முதலிடத்தில் உள்ள நிலையில், ரிஷப் பந்த் (21 வருடம் 38 நாட்கள்) இரண்டாவது இடத்தில் இருந்தார். இந்நிலையில், தற்போது திலக் வர்மா 20 வருடம் 271 நாட்களில் அரைசதம் அடித்து ரிஷப் பந்தை முந்தியுள்ளார்.