INDvsWI டி20: இரண்டாவது போட்டியிலும் தோல்வி; வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக மோசமான சாதனை படைத்த இந்தியா
ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 6) கயானாவில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. முன்னதாக, டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் திலக் வர்மா அரைசதம் கடந்து 51 ரன்கள் எடுத்த நிலையில், இஷான் கிஷன் 27 ரன்களும், ஹர்திக் பாண்டியா 24 ரன்களும் எடுத்தனர். 153 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் விரைவில் சரிந்தாலும், மிடில் ஆர்டரில் களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் 67 ரன்கள் எடுத்தார்.
மோசமான சாதனை படைத்த இந்தியா
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியில் நிக்கோலஸ் பூரன் தவிர, குறிப்பிடத்தக்க அளவில் ரோவ்மன் பவல் மற்றும் ஷிம்ரன் ஹெட்மயர் முறையே 21 மற்றும் 22 ரன்கள் எடுத்தனர். ஒருபுறம் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த நிலையில், அகில் ஹுசைன் மற்றும் அல்காரி ஜோசப் கடைசி வரை களத்தில் நின்று அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மேலும், இந்த தோல்வியின் மூலம், டி20 கிரிக்கெட் வரலாற்றில் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் அதிக தோல்வியைத் பெற்ற ஆசிய அணிகளில் ஒன்றாக இந்தியா மாறியுள்ளது. தலா 9 தோல்விகளுடன், இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் இந்த மோசமான சாதனையில் தற்போது முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளன.