INDvsPAK போட்டிக்கு ஹோட்டல் முன்பதிவு ஓவர்; மருத்துவமனை அறையை வாடகைக்கு எடுக்கும் ரசிகர்கள்
இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுடன் அக்டோபர் 15ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் 2023 ஒருநாள் உலகக்கோப்பையில் நேருக்கு நேர் மோத உள்ளது. போட்டியின் அட்டவணை வெளியீட்டில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் போட்டி நடைபெறும் இடம் உறுதிசெய்யப்பட்டதிலிருந்து, ஹோட்டல் அறை விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. ஹோட்டல் அறைகள் சுமார் 50000 முதல் 1 லட்சம் வரை பெரும் விலையில் பதிவு செய்யப்படுகின்றன. மேலும், அறைகளும் முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், ரசிகர்கள் பலர் ஹோட்டலுக்கு இவ்வளவு பெரிய தொகையை செலுத்துவதை தவிர்க்க புதிய உத்தியை திட்டமிட்டுள்ளனர்.
மருத்துவமனைகளில் முழு உடல் பரிசோதனைக்கு அதிகரிக்கும் முன்பதிவு
அகமதாபாத்தில் போட்டி நடக்கும் மைதானத்திற்கு அருகில் உள்ள மருத்துவனைகளை தொடர்பு கொள்ளும் பலர், போட்டி நடக்கும் தேதிகளில் மருத்துவமனையில் முழு உடல்பரிசோதனைக்கு முன்பதிவு செய்து வருகின்றனர். முழு உடல் பரிசோதனைக்காக ஒரு நாளைக்கு அறையை முன்பதிவு செய்யும் நபர்கள், தங்களோடு மற்றொரு உதவியாளருக்கு சேர்த்து அறைகளை முன்பதிவு செய்து வருகிறார்கள். இதற்கு மருத்துவமனைகளில் ஒரு நாளின் விலை ரூ.3,000 முதல் ரூ.25,000 வரை மாறுபடும். எனினும் இது ஹோட்டல் அறை விலைகளுடன் ஒப்பிடும்போது மிகவும் மலிவானதாகும். மருத்துவமனையில் முன்பதிவு அதிகரித்து வரும் நிலையில், அக்டோபர் 15ஆம் தேதிக்கு மட்டும் முழு உடற் பரிசோதனைகளை கொண்ட சிறப்பு திட்டங்களை வழங்க மருத்துவமனைகளும் தயாராகி வருகின்றன.