மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்; நியூசிலாந்துக்கு எதிராக 36 ஆண்டு சாதனையை தக்கவைக்குமா இந்தியா?
செய்தி முன்னோட்டம்
டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட இந்தியாவுக்கு கிளம்பியுள்ளது.
அந்த அணியின் முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன் இல்லாத நிலையில், முழு நேர கேப்டனாக செயல்படும் டாம் லாதமிற்கு இது மிக முக்கிய தொடராக மாறியுள்ளது.
இந்த மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி அக்டோபர் 16 அன்று பெங்களூரிலும், இரண்டாவது போட்டி அக்டோபர் 24 அன்று புனேவிலும், மூன்றாவது போட்டி நவம்பர் 1 அன்று மும்பையிலும் தொடங்க உள்ளன.
நியூசிலாந்து அணி கடைசியாக இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 0-2 என தோற்ற நிலையில், இந்தியாவில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி
1988க்கு பிறகு தோல்வியே கண்டிராத இந்திய அணி
மறுபுறம் இந்திய கிரிக்கெட் அணி, சமீபத்தில் நடந்து முடிந்த வங்கதேச தொடரில் வெற்றி பெற்று வலுவாக உள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசைப் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ள நிலையில், நியூசிலாந்து ஆறாவது இடத்தில் உள்ளது.
இந்தியா-நியூசிலாந்து இடையே இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் நியூசிலாந்து அணி இதுவரை 2 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது.
அந்த அணி கடைசியாக பெற்ற வெற்றி 1988இல் கிடைத்ததாகும். இந்நிலையில், 36 ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் வெற்றியைப் பெறும் முனைப்புடன் நியூசிலாந்து அணி வீரர்கள் இந்தியாவிற்கு கிளம்பியுள்ளனர்.
இதற்கிடையே, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வாய்ப்பை எந்தவித சிக்கலும் இல்லாமல் உறுதி செய்ய இந்த தொடரின் மூன்று போட்டிகளையும் வெல்லும் முனைப்புடன் இந்தியா உள்ளது குறிப்பிடத்தக்கது.