INDvsBAN 2வது டெஸ்ட்: 233 ரன்களுக்கு சுருண்டது வங்கதேசம்; டி20 கிரிக்கெட் போல் அடித்து ஆடும் இந்திய பேட்ஸ்மேன்கள்
கான்பூரில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் வங்கதேச கிரிக்கெட் அணி 233 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. முன்னதாக, செப்டம்பர் 27 அன்று தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் பேட்டிங் செய்த வங்கதேச அணி முதல் நாளில் 3 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது. மேலும், இரண்டு மற்றும் மூன்றாவது நாள் ஆட்டம் இதே காரணத்தால் முழுமையாக ரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து நானாவது நாளான இன்று மீண்டும் போட்டி தொடங்கியது.
மொமினுல் ஹக் சதம்
வங்கதேச கிரிக்கெட் அணியில் மொமினுல் ஹக் மட்டும் கடைசி வரை அவுட்டாகாமல் போராடி 107 ரன்கள் சேர்த்த நிலையில், மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இந்திய கிரிக்கெட் அணியின் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஜஸ்ப்ரீத் பும்ரா அதிகபட்சமாக மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். முகமது சிராஜ், ரவிச்சந்திரன் அஸ்வின், ஆகாஷ் தீப் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், ரவீந்திர ஜடேஜா ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். இதைத் தொடர்ந்து இந்திய அணி பேட்டிங்கைத் தொடங்கிய நிலையில், கேப்டன் ரோஹித் ஷர்மா 23 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டாகி வெளியேறினார். யஷஸ்வி ஜெய்ஸ்வாலும், ஷுப்மன் கில்லும் டி20 கிரிக்கெட் போல் அதிரடியாக ஆடி ரன் சேர்த்து வருகின்றனர்.