மழையால் இந்தியா vs ஆஸ்திரேலியா போட்டி ரத்தானால் யார் அரையிறுதிக்கு தகுதி பெறுவார்கள்?
இன்று மாலை செயின்ட் லூசியாவில் டி20 உலகக் கோப்பை 2024 சூப்பர் 8 போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையேயான போட்டியில் மழை முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புள்ளிகள் பட்டியலில் இந்தியா அணி சாதகமான நிலையில் இருக்கிறது. மறுபுறம் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான அதிர்ச்சி தோல்வியின் காரணமாக ஆஸ்திரேலியாவின் நிலைமை சற்றே ஆபத்தான நிலையில் இருக்கிறது. அக்யூவெதரின் கூற்றுப்படி, கிட்டத்தட்ட நாள் முழுவதும் (ஜூன் 24) நகரில் மழை அதிகமாக பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா போட்டி உள்ளூர் நேரப்படி காலை 10:30 மணிக்கு தொடங்கும் முன் மழை எதிர்பார்க்கப்படுகிறது. போட்டி தொடங்கிய பிறகு மழை அதிகரிக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளதால், போட்டிக்கு வாஷ்அவுட் அச்சுறுத்தல் உள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா போட்டி மழையால் கைவிடப்பட்டால் என்ன நடக்கும்?
டி 20 உலகக் கோப்பையின் சூப்பர் 8 களில் குரூப் 1இல் இடம்பெற்றுள்ள இரு அணிகளில், இந்தியா அணிக்கு இதுவரை 100% வெற்றியும், +2.425 நிகர ரன் விகிதமும் இருப்பதால் அரையிறுதியில் நுழைய வலுவான வாய்ப்பு உள்ளது. ஆஸ்திரேலியாவோ +0.233 நிகர ரன் விகிதத்துடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்தியாவுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான போட்டி மழையால் ரத்தானால், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி கிடைக்கும். அத்தகைய சூழ்நிலையில் இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெறும். அதே வேளையில் ஆஸ்திரேலியாவின் முன்னேற்றம் ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேசம் இடையேயான போட்டியின் முடிவைப் பொறுத்தது. வங்கதேசம் ஆப்கானிஸ்தானை வீழ்த்தினால், ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு தகுதி பெரும். ஆனால், ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றால் அரையிறுதிப் போட்டியில் இருந்து ஆஸ்திரேலியா வெளியேறிவிடும்.