INDvsAUS 3வது போட்டி : கில், பாண்டியா, ஷமி விளையாட மாட்டார்கள் என அறிவிப்பு; காரணம் இதுதான்
இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் தொடரின் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியில் சில வீரர்கள் இடம்பெற மாட்டார்கள் என கேப்டன் ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார். இருதரப்பு தொடரின் கடைசி போட்டி புதன்கிழமை (செப்டம்பர் 27) அன்று நடைபெறும் நிலையில், போட்டிக்கு முன்னதாக பேசிய கேப்டன் ரோஹித் ஷர்மா, இந்த போட்டியில் இந்தியா தரப்பில் 13 வீரர்கள் மட்டுமே இருப்பர் என தெரிவித்துள்ளார். ரோஹித் ஷர்மாவும் விராட் கோலியும் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடாத நிலையில், மூன்றாவது போட்டியில் விளையாட உள்ளார்கள். எனினும் ஷுப்மன் கில், ஹர்திக் பாண்டியா மற்றும் முகமது ஷமி ஆகியோர் தனிப்பட்ட காரணங்களுக்காக பங்கேற்க மாட்டார்கள் என ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார்.
நிச்சயமற்ற நிலையில் இந்திய கிரிக்கெட் அணி
மேலே குறிப்பிட்டுள்ள வீரர்களைத் தவிர, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிரான கடைசி போட்டியில் காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாத அக்சர் படேலும் இடம்பெற மாட்டார். இதனால் இந்திய அணியில் தற்போது 13 வீரர்கள் மட்டுமே உள்ளதால், வீரர்கள் தேர்வில் நிச்சயமற்ற நிலை உள்ளதாக ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார். எனினும், ஆசிய கோப்பை மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் உள்ளிட்ட தனது கடைசி 10 போட்டிகளில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டுள்ளது எனக் கூறியுள்ள ரோஹித் ஷர்மா, இந்தியா ஒருநாள் உலகக்கோப்பைக்கு முன்னதாக சரியான நேரத்தில் உச்சநிலையை எட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து காயம் குறித்து பேசிய அவர், 2023 ஒருநாள் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இனி காயங்கள் ஏற்படாது என்று நம்புவதாக தெரிவித்துள்ளார்.