பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் 2023 : இந்தியா vs ஆஸ்திரேலியா முதல் போட்டி புள்ளி விபரங்கள்
வியாழக்கிழமை (பிப்ரவரி 9) தொடங்கும் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள இந்தியா தயாராகி வருகிறது. நடப்பு ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற, இந்தியாவுக்கு குறைந்தபட்சம் 2-0 என்ற கணக்கில் வெற்றி தேவை. அதே நேரம் ஆஸ்திரேலியாவுக்கு ஒரு டிரா மட்டுமே தேவை. முதல் போட்டி நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியத்தில் தொடங்க உள்ளது. .இங்கு முதலில் பேட்டிங் செய்யும் அணிகள், இதுவரை நடந்துள்ள ஆறு டெஸ்ட் போட்டிகளில் மூன்றில் 324 ரன்களை சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோராக பெற்றுள்ளன. இங்கு நடந்த 6 டெஸ்டில் நான்கில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா vs ஆஸ்திரேலியா சாதக பாதகங்கள்
இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இதுவரை மொத்தம் 102 டெஸ்ட் போட்டிகளில் மோதியுள்ள நிலையில், ஆஸ்திரேலியா 43 போட்டிகளிலும், இந்தியா 30 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. 28 ஆட்டங்கள் டிராவில் முடிவடைந்துள்ளன. அதே நேரம், இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவில் வைத்து 50 டெஸ்டில் விளையாடியுள்ள நிலையில், இதில் 21 வெற்றிகளையும் 13 தோல்விகளையும் பெற்றுள்ளது. இந்தியாவின் சிறந்த டெஸ்ட் விக்கெட் கீப்பர்-பேட்டர் ரிஷப் பந்த் இந்த தொடரில் இல்லை. மேலும், வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா குறைந்தபட்சம் முதல் இரண்டு ஆட்டங்களில் பங்கேற்கவில்லை. ஷ்ரேயாஸ் ஐயரும் முதல் ஆட்டத்தில் பங்கேற்கவில்லை. ஆஸ்திரேலியா அணிக்காக ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் நாக்பூர் டெஸ்டில் பங்கேற்க மாட்டார்கள். கேமரூன் கிரீன் ஆடுவதும் சந்தேகமாக உள்ளது.