ஐசிசி மகளிர் டி20 பேட்டிங் தரவரிசையில் இந்திய வீராங்கனைகள் முன்னேற்றம்!!
ஐசிசி மகளிர் டி20 பேட்டிங் தரவரிசையில் இந்திய வீராங்கனைகளான ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் ரிச்சா கோஷ் ஆகியோர் முன்னேறியுள்ளனர். ரோட்ரிக்ஸ் 11வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அதே நேரத்தில் விக்கெட் கீப்பர் பேட்டர் கோஷ் 42வது இடத்தில் இருந்து 36வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். நடந்து வரும் ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானை இந்தியா ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதில் இருவரும் மிகவும் சிறப்பாக செயல்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த போட்டியில் ஜெமிமா 38 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 53* ரன்கள் எடுத்தார். கோஷ் 20 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 31* ரன் எடுத்தார்.
ஐசிசி தரவரிசையில் இந்திய வீராங்கனைகளின் நிலை
காயம் காரணமாக ஐசிசி டி20 உலகக்கோப்பையின் முதல் ஆட்டத்தில் விளையாடாத இந்தியாவின் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, பேட்டிங் தரவரிசையில் 3-வது இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறார். மகளிர் யு-19 உலகக்கோப்பையை இந்தியாவுக்கு பெற்றுத் தந்த ஷபாலி வர்மா 10வது இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறார். இந்நிலையில் திங்களன்று (பிப்ரவரி 13) நடந்த மகளிர் ஐபிஎல் முதல் சீசனுக்கான ஏலத்தில் ஸ்மிரிதி மந்தனா மிக அதிகபட்சமாக ரூ.3.40 கோடிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியால் எடுக்கப்பட்டுள்ளார். டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஜெமிமாவை ரூ.2.20 கோடிக்கு கைப்பற்றிய நிலையில், ரிச்சா கோஷ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியால் ரூ.1.90 கோடிக்கு எடுக்கப்பட்டுள்ளார்.