Loading...
"ஃபிஃபா கேம் போல கிரிக்கெட்டுக்கும் ஒரு ஆன்லைன் கேம்..." பெங்களூரு ஸ்டார்ட்அப் நிறுவனத்துடன் கைகோர்க்கிறது ஐசிசி
ஐசிசியின் முதல் ஸ்டார்ட்அப் முதலீடு

"ஃபிஃபா கேம் போல கிரிக்கெட்டுக்கும் ஒரு ஆன்லைன் கேம்..." பெங்களூரு ஸ்டார்ட்அப் நிறுவனத்துடன் கைகோர்க்கிறது ஐசிசி

எழுதியவர் Sekar Chinnappan
Jul 17, 2026
11:34 am

செய்தி முன்னோட்டம்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தனது வரலாற்றிலேயே மிக முக்கிய வணிக மைல்கல்லாக, பெங்களூருவைச் சேர்ந்த லைட்ஃப்யூரி கேம்ஸ் என்ற கேம்-டெக் ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் முதலீடு செய்யத் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. ஐசிசி அமைப்பு ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் நேரடியாக முதலீடு செய்ய முன்வருவது இதுவே முதன்முறையாகும். இந்த அதிரடி கூட்டு முயற்சியின் ஒரு பகுதியாக, மொபைல், கணினி மற்றும் கன்சோல் ஆகிய மூன்று முக்கிய தளங்களுக்குமான ஐசிசியின் அதிகாரப்பூர்வ உலகளாவிய கேமிங் உரிமங்களையும் லைட்ஃப்யூரி கேம்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. டிஜிட்டல் கேமிங் வரலாற்றில் ஒரே நேரத்தில் மூன்று தளங்களுக்கும் சேர்த்து ஒரு நிறுவனத்திற்கு உரிமம் வழங்கப்படுவது மிக அரிய நிகழ்வாகும்.

இந்திய வீரர்கள்

தோனி, பும்ரா போன்ற ஜாம்பவான்கள் பின்னணியில் இருக்கும் நிறுவனம்

கடந்த 2024 ஆம் ஆண்டு அன்அகாடமியின் முன்னாள் முதலீட்டாளர் கரண் ஷ்ராஃப், ஆன்லைன் கேமிங் துறையின் மூத்த நிபுணர் அனுராக் பானர்ஜி மற்றும் டினா பாலச்சந்திரன் ஆகியோரால் இந்த ஸ்டார்ட்அப் தொடங்கப்பட்டது.

இந்த நிறுவனத்தில் எம்எஸ் தோனி, ஜஸ்ப்ரீத் பும்ரா, ஹர்திக் பாண்டியா, ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் முக்கிய முதலீட்டாளர்களாகவும், ஆதரவாளர்களாகவும் உள்ளனர்.

இந்த முன்னணி வீரர்கள் அனைவரும் கேம் அறிமுகப்படுத்தப்படும் போது, விளையாடக்கூடிய முக்கியக் கதாபாத்திரங்களாக கேமிற்குள் வலம் வரவுள்ளனர்.

இதுமட்டுமன்றி, வாட்ஸ்அப் உலகளாவிய தலைவர் குணால் ஷா, அன்அகாடமி இணை நிறுவனர் கௌரவ் முஞ்சல் மற்றும் பல்வேறு முன்னணி நிறுவன முதலீடுகள் மூலம் இந்த ஸ்டார்ட்அப் இதுவரை சுமார் 20 மில்லியன் டாலர் நிதியைத் திரட்டியுள்ளது.

ஃபிஃபா

கால்பந்தின் 'ஃபிஃபா' போல கிரிக்கெட்டிற்கு ஒரு பிரம்மாண்ட 'ஏஏஏ' கேம்

லைட்ஃப்யூரி கேம்ஸ் நிறுவனம் தற்பொழுது இ-கிரிக்கெட் என்ற பெயரில் மிக பிரம்மாண்ட பட்ஜெட்டைக் கொண்ட ஏஏஏ (AAA Game) கிரிக்கெட் கேம் ஒன்றை உருவாக்கி வருகிறது.

உலகளவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக 325 மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் விற்பனையாகி சாதனை படைத்த கால்பந்து விளையாட்டின் புகழ்பெற்ற ஃபிஃபா (தற்போது EA Sports FC) கேமிற்கு இணையாக, கிரிக்கெட் விளையாட்டிலும் ஒரு மிக தத்ரூபமான நிகழ்நேர மல்டிபிளேயர் (Real-time Multiplayer) அனுபவத்தை உலக கிரிக்கெட் ரசிகர்களுக்கு வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்.

கிரிக்கெட்டிற்கு உலகளவில் இத்தனை கோடி ரசிகர்கள் இருந்தும், ஃபிஃபா அளவிற்கு ஒரு பிரம்மாண்ட கேமிங் பிரான்சைஸ் இதுவரை உருவாகாத குறையை இந்த இ-கிரிக்கெட் நிவர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

வீரர்களின் உரிமம்

600க்கும் மேற்பட்ட சர்வதேச வீரர்களின் அதிகாரப்பூர்வ உரிமம்

உலகளாவிய சந்தையைக் கைப்பற்றும் நோக்கில், யுபிசாஃப்ட் மற்றும் எலக்ட்ரானிக் ஆர்ட்ஸ் (EA) போன்ற உலகின் முன்னணி கேமிங் நிறுவனங்களில் பணியாற்றிய சர்வதேச வல்லுநர்களைக் கொண்டு இதன் நிர்வாகக் குழு உருவாக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில், வின்னர்ஸ் அலையன்ஸ் நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் மூலம் கிறிஸ் கெய்ல், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், கேன் வில்லியம்சன், பாட் கம்மின்ஸ் உள்ளிட்ட உலகத்தரம் வாய்ந்த 600க்கும் மேற்பட்ட சர்வதேச தொழில்முறை கிரிக்கெட் வீரர்களின் அதிகாரப்பூர்வ பெயர்கள் மற்றும் உருவ அமைப்புகளை பயன்படுத்துவதற்கான உரிமத்தையும் இந்த நிறுவனம் பெற்றுள்ளது.

ADVERTISEMENT

கேம் வெளியீடு

ஏஐ தொழில்நுட்பமும் கேம் வெளியீட்டுத் திட்டமும்

பொதுவாக உயர்தர 'ஏஏஏ' (AAA) வகை கேம்களை உருவாக்குவதற்கு 3 முதல் 5 ஆண்டுகள் வரை கால அவகாசம் தேவைப்படும்.

ஆனால், லைட்ஃப்யூரி கேம்ஸ் நிறுவனம் தனது கேம் வடிவமைப்பில் நவீன செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை முதன்மையாக பயன்படுத்துவதால், உற்பத்தி நேரத்தைக் கணிசமாகக் குறைத்து வெறும் இரண்டு ஆண்டுகளிலேயே இந்த கேமைத் தயார் செய்யத் திட்டமிட்டுள்ளது.

முதற்கட்டமாக இந்த இ-கிரிக்கெட் கேம் வருகிற 2027 ஆம் ஆண்டில் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் போன்ற மொபைல் தளங்களில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

அதன் தொடர்ச்சியாக கணினி மற்றும் பிளேஸ்டேஷன், எக்ஸ்பாக்ஸ் போன்ற கன்சோல் தளங்களுக்கும் இந்த கேம் விரிவுபடுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT