உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்களில் புதிய 'Super 7' மற்றும் 'Super 10' முறைகள் அறிமுகம்
செய்தி முன்னோட்டம்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) எடின்பர்க்கில் நடைபெற்ற அதன் வருடாந்திர கூட்டத்தில், ஒருநாள் (ODI) மற்றும் டி20 (T20) உலகக்கோப்பை தொடர்களின் உள்கட்டமைப்பை முற்றிலுமாக மாற்றியமைக்கும் முடிவுகளை அறிவித்துள்ளது. சுவாரசியமில்லாத, ஆரம்பகட்ட லீக் போட்டிகளால் ரசிகர்களுக்கும் ஒளிபரப்பு நிறுவனங்களுக்கும் ஏற்படும் அலுப்பை தவிர்த்து, ஒவ்வொரு போட்டிக்கும் கடுமையான வாழ்வா சாவா முக்கியத்துவத்தை அளிக்கும் நோக்கில் இந்த புதிய விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
சூப்பர் 7
ஒருநாள் உலகக்கோப்பை (ODI World Cup): புதிய 'Super 7' முறை
2027 ஆம் ஆண்டு ODI தொடரிலிருந்து இந்த புதிய மாடல் அமலுக்கு வருகிறது.
சுற்று 1: தி சூப்பர் சீரிஸ்: தகுதிபெறும் கடைசி 3 அணிகள் (தரவரிசையில் 12, 13, 14 வது இடங்கள்) தொடரின் ஆரம்பத்திலேயே 'சூப்பர் சீரிஸ்' என்ற சுற்றில் மோத வேண்டும். இதில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிக்கும் ஒரே ஒரு அணி மட்டும்தான் பிரதான தொடருக்குள் நுழையும்.
சுற்று 2: குரூப் ஸ்டேஜ்: சூப்பர் சீரிஸில் வென்ற ஒரு அணியுடன் சேர்த்து மொத்தம் 12 அணிகள் தலா 6 அணிகள் வீதம் 2 குரூப்களாக பிரிக்கப்படும். மொத்தம் 30 போட்டிகள் நடக்கும். ஒவ்வொரு குரூப்பிலும் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் அணிகள் நேரடியாக அடுத்த சுற்றுக்குச் செல்லும்.
இறுதி சுற்றுகள்
மாரத்தான் மற்றும் நாக்-அவுட் சுற்று
சுற்று 3: சூப்பர் 7 மாரத்தான்: முன்பு இருந்த 'சூப்பர் சிக்ஸ்' முறைக்கு விடை கொடுக்கப்பட்டு, இந்த முறை தகுதிபெறும் 7 அணிகளும் ஒரே புள்ளிப்பட்டியலின் கீழ் கொண்டு வரப்பட்டு, தங்களுக்குள் தலா ஒருமுறை (21 போட்டிகள்) மோதும்.
சுற்று 4: நாக்-அவுட்: இந்த ஒற்றை 'சூப்பர் 7' புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் மட்டுமே அரையிறுதிக்குத் தகுதிபெறும்.
டி20 உலகக்கோப்பை
டி20 உலகக்கோப்பை: ஐபிஎல் பாணி எலிமினேட்டர்கள்
2028 ஆம் ஆண்டு முதல் 20 அணிகள் பங்கேற்கும் டி20 உலகக்கோப்பை தொடரும் முற்றிலும் புதிய வடிவம் பெறுகிறது.
இதற்கு முன் 20 அணிகள் 4 குரூப்களாக பிரிக்கப்பட்டு 40 போட்டிகள் நடந்தன.
இனிமேல் அவை 5 குரூப்களாகப் பிரிக்கப்பட்டு (குரூப்பிற்கு 4 அணிகள்) மொத்தம் 30 போட்டிகள் மட்டுமே நடக்கும்.
இதனால் ஒவ்வொரு போட்டியும் மிக முக்கியமானதாக மாறும். ஒவ்வொரு குரூப்பிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
முன்பு இருந்த 'சூப்பர் 8' முறைக்கு மாற்றாக, இனி 'சூப்பர் 10' முறை அறிமுகமாகிறது.
தகுதிபெறும் 10 அணிகள் 2 குரூப்களாக பிரிக்கப்படும்.
இதன் மூலம் அசோசியேட் நாடுகளுக்கு முன்னணி நாடுகளுடன் விளையாட கூடுதல் வாய்ப்பு கிடைக்கும்.
பிளே-ஆஃப்
ஐபிஎல் பாணி பிளே-ஆஃப்
முன்பு சூப்பர் 8 குரூப்களில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு சென்றன.
ஆனால் புதிய விதியின்படி, சூப்பர் 10 சுற்றின் குரூப் A மற்றும் குரூப் B-யில் முதலிடம் பிடிக்கும் 2 அணிகள் நேரடியாக அரையிறுதிக்குத் தகுதிபெறும்.
குரூப் A-வில் 2 மற்றும் 3-வது இடம் பிடிக்கும் அணிகள், குரூப் B-யின் 3 மற்றும் 2-வது இடம் பிடிக்கும் அணிகளுடன் 'எலிமினேட்டர்' நாக்-அவுட் போட்டிகளில் மோத வேண்டும்.
இந்த இரண்டு எலிமினேட்டர் போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளே கடைசி 2 அரையிறுதி இடங்களை கைப்பற்றும்.
ஐசிசி கொண்டு வந்துள்ள இந்த புதிய கட்டமைப்பு மாற்றங்கள், உலகக்கோப்பை தொடர்களில் ஆரம்பம் முதல் இறுதி வரை சுவாரசியத்தைக் கூட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது