
மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை 2025: ஒளிபரப்பு மற்றும் ஸ்ட்ரீமிங் விவரங்களை வெளியிட்டது ஐசிசி
செய்தி முன்னோட்டம்
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025 தொடருக்கான ஒளிபரப்பு மற்றும் நேரடி ஸ்ட்ரீமிங் கூட்டாளர்களின் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டுள்ளது. எதிர்வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி தொடங்கவுள்ள இந்தப் பிரமாண்டமான தொடர், உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்குப் பல வழிகளில் சென்றடைய உள்ளது. இந்த ஆண்டின் உலகக் கோப்பையை இந்தியா நடத்துகிறது. முதல் போட்டியில் இந்தியா மகளிர் அணியை இலங்கை மகளிர் அணி எதிர்கொள்கிறது. இந்தியாவில் நடைபெறும் போட்டிகள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மூலம் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். போட்டிகளை ரசிகர்கள் ஜியோஹாட்ஸ்டார் செயலி மற்றும் இணையதளம் மூலம் நேரலையில் காணலாம். போட்டிகள் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வர்ணனையுடன் ஒளிபரப்பப்படும்.
ஒளிபரப்பு
சர்வதேச ஒளிபரப்பு விபரங்கள்
இந்தியா அல்லாத பிற நாடுகளுக்கும் ஒளிபரப்பு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, ஸ்டார் ஸ்போர்ட்ஸின் நேரடி ஒளிபரப்புடன், இலங்கையில் மகாராஜா டிவி அனைத்துப் போட்டிகளையும் ஒளிபரப்பும். வங்கதேசம், நேபாளம், மாலத்தீவுகள் மற்றும் பூடான் நாடுகளில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இந்தியா சேனல் மூலம் பார்க்கலாம். இங்கிலாந்தில் ஸ்கை ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட், ஆஸ்திரேலியாவில் பிரைம் வீடியோ, நியூசிலாந்தில் ஸ்கை டிவி, அமெரிக்கா மற்றும் கனடாவில் வில்லோ டிவி, கரீபியன் மற்றும் தென்னாப்பிரிக்காவில் ஈஎஸ்பிஎன் மூலம் மகளிர் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. முன்னதாக, இந்தியாவில் மட்டுமே போட்டிகள் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் பதற்றம் காரணமாக ஹைபிரிட் முறையில் இந்தியா மற்றும் இலங்கையில் கூட்டாக நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.