டெஸ்டில் அதிவேகமாக 800 ரன்களை கடந்த வீரர் : இங்கிலாந்தின் ஹாரி ப்ரூக் சாதனை
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன் ஹாரி புரூக் சதம் அடித்ததோடு, முதல் 9 இன்னிங்ஸ்களில் 800 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். ஹாரி ப்ரூக் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 169 பந்துகளில் 184 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். இது புரூக்கின் நான்காவது டெஸ்ட் சதம் மற்றும் அவரது கடைசி எட்டு டெஸ்ட் இன்னிங்ஸ்களில் ஏழாவது ஐம்பது பிளஸ் ஸ்கோர் என்பது குறிப்பிடத்தக்கது. ப்ரூக் 9 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை செய்த நிலையில், இதற்கு முன்னதாக இந்தியாவின் வினோத் காம்ப்லி முதல் 9 இன்னிங்ஸ்களுக்குப் பிறகு798 ரன்களுடன் முதலிடத்தில் இருந்தார்.
டெஸ்டில் ஹாரி ப்ரூக் செயல்திறன்
கடந்த ஆண்டு செப்டம்பரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான ப்ரூக், தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் இதுவரை 6 ஆட்டங்களில் 9 இன்னிங்ஸ்களில் 100.88 என்ற அதிகபட்ச சராசரியில் 807 ரன்கள் குவித்துள்ளார். இதில் நான்கு சதங்கள் மற்றும் மூன்று அரைசதங்கள் அடங்கும். நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது போட்டியில் 184 ரன்களுடன் களத்தில் நிற்கும் ஹாரி ப்ரூக், நிலைத்து நின்றாள் நியூசிலாந்து மண்ணில் டெஸ்ட் இரட்டை சதம் அடித்த ஐந்தாவது இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை பெற முடியும். முன்னதாக இங்கிலாந்தின் வால்டர் ஹம்மண்ட் (336* மற்றும் 227), ரூட் (226), கீத் பிளெட்சர் (216), மற்றும் கிரஹாம் தோர்ப் (200*) ஆகியோர் நியூசிலாந்தில் இரட்டை சதம் அடித்துள்ளனர்.